புலத்துக் காண்டம். அத்தியாயம்:14 நிகழ்காலம். ஈழப்போர் ஐந்தொகை! (01)இந்தியத் தடம்! (கட்டளைக் கலித்துறை) இந்தநூற் றாண்டின் இராட்சத னென்கத் திராசபக்சன் வெந்து கொழுத்திட வீசிய குண்டில் வெரிந்தநிலம் சந்து நெடுங்கடல் தாமணல் அள்ளத் தணலெரிக்கப் பொந்து சதையெனப் பூமி அகழ்ந்திடப் போட்டதுவே! புலத்தி லுறைந்தயான் பெற்ற மணிநிலம் பேய்குதற விலத்தி வதிந்திடப் போகுவனோ வெங்க ளினம்சாக மலத்தைக் கழுவிய ஒட்டனாய் வாழ்வனோ மண்ணிறகில் நிலத்துத் துயரிலே நீர்விழி யாறனாய் நீந்தினனே! ஐம்பதி னாயிரம் ஆர்நில மக்களே அஞ்சிவிழப் பிய்ந்தொரு நாளிற் பிணமெனப் போகப் புகைந்துவிழ நொய்ந்து நடந்து நுடங்கி விழுந்து நெருப்பாட தொய்ந்த தமிழினம் தீயுடல் பற்றிடத் தீய்ந்ததுவே! பாரத் தொழிலும் பனியின் விறைப்பும் படர்ந்தொருகால் சேரத் தமிழினம் சிக்கப் புலத்திற் சிறப்பிடினும் ஈர மணிநிலம் எற்றி யெரிகையில் கூற்றாரின் கோரப் பிடியிலே சிக்கிய வாதை கொழுத்தியதே! அறுபது ஆண்டுகள் ஆன நெருப்பினை அள்ளிவர உறுவதை யெல்லமும் ஓடிய கண்கள் எடுத்துவர நெறியுடைச் சாதியாய் எம்தமிழ் நின்று நிதமெழுத செறிந்த வரக்கரிற் சிக்கித் தமிழினம் செத்ததுவே! நாத மெனநின்ற நாயகத் தோடுறை நாடுஎன்கப் போதம் இயற்றிய புத்தகமாய் ஈழப் பூவிலங்கச் சாதி சமயங்கள் சாற்றிடா வீதிச் சரம்தொடுத்த நீதி அரசு இலையே தமக்கென வீழ்த்தினரே! போதந் தழுவிய வேங்கை மறவரின் பூங்கரத்தில் வேத விடியலாய்ச் சத்திய வேள்வி விளைத்தவரின் மாதவம் கண்டு வரைந்த சுதந்திர வார்ப்பெழுதி மேதை பிரபா வியற்றிடா வண்ணமாய் வீழ்த்தினரே! தமிழகம் மேலதாய்ச் தங்க வரசொன்று தந்தொருகால் கமழவே ஈழம் கனிந்திட லாமெனிற் கருச்சிதைத்து அமிழ உடைப்பதே இந்தியத் தோட்டிகள் எண்ணமதாய் உமிழ அழித்தனர் கந்தகம் கொட்டி இலங்கருக்கே! வஞ்சகம் மேலிட வார்த்துமே கந்தக வார்க்குருதி நெஞ்சு வெடித்திட வன்னிமண் தீயாய் நெருப்பெரிய பிஞ்சும் முதியவர் பெற்றதாய் அன்னைப் பிணக்காடு விஞ்சிய போதிலும் சோனியா சிந்தையில் வெந்திலளே! இந்திய வல்லர சானவர் இந்துக் கடலறியார் சந்தில் நுழைந்திடச் சீனா மடக்கிய சாலறியார் செந்தமிழ் ஈழத்தைச் சேர எரித்ததால் இந்தியத்தின் பொந்தில் விரிந்த பிழையென நாளைதான் பேசிடுமே! சிங்களம் தாக்கவே செத்துஐ நூறாய்ச் சிதறிவிடப் பொங்குகடல் மீது பொசுங்க அடித்துப் பிடிப்பாரைத் தங்குதடை யின்றித் தடியாற் புடைத்துத் தகர்த்தாட எங்கேஇ ருந்தார் கருணா நிதியென்ற காவியமே! தங்கட்கு மேலே தலைவன் பிரபாத் தகையிருக்கப் பொங்குமி வர்க்குப் பிடியாது போன புதைநெஞ்சால் சங்கத் தமிழீழம் சாக்காடு கொள்ளச் சரித்திரமாய் இங்குவித் திந்தியம் ஏற்பா டியற்றி யிடித்தனரே! என்பு துடித்திட எங்கள் தமிழின வேந்தர்களாய் தின்று முடிந்தநம் மீழ மனிதரை யெண்ணினராய் தன்னைத்தீ யிட்ட மறவரைத் தந்த தமிழகத்தின் மன்னை உருக்கிய பத்தொடு நான்குமாய்ப் பார்த்தனமே! ஓமம் வளர்த்துப் பிரபா நிறுவிய நெஞ்சினராய்ச் சீமான், நெடுமாறன், வைக்கோ, இராமதாஸ் மாவளவர் காமப் படைலங்கர் கன்னியர் வல்லிட்ட காடையரைத் சேமம் படைக்கத் துருவிய இந்தியம் கேட்டனரே! அறமே எழுக அறத்தீ எழுக இராசபக்சர் குறக்கா டழித்து அரக்கம் ஒழித்துக் கூவியொரு முறைக்கே டகற்றி முழுமடை விந்திய மூடகற்றி அறமே எழுக! அறத்தீ எழுகவென் றார்த்தனரே! மூன்று இலட்சமாய் முகாம்களில் வாடிய முத்தமிழர் தோன்றிய நோயொடும் துப்பர வின்றி மலங்கழிக்கப் போன்ற மறைப்பிலாப் பேர்மழை வெள்ளமும் போட்டழிக்கச் சான்று எடுப்பரைச் சங்கதி சேர்ப்பரை யேய்த்தனரே! போரை நடத்திப் புலிகளார் நின்ற பெருந்துறையை ஊராய் அழிக்க எடுத்த கொடுமைக்கு இந்தியத்தின் சேராய் நடந்து இலங்க அரக்கருள் தீட்டுவைத்த கோரச் சதியைக் குறிக்கச் சரித்திரம் கொண்டதுவே! வீறு கொடுத்துப் புலியெதிர்த் தாடிய போர்க்களத்தில் சேறு பிரட்டிய சேர்வலி நாடுகள் சேர்ந்ததினால் பாறு மெரிமலை பார்ப்பது போற்புகை வான்தெரிய நூறுபல் நூறென மக்கள் புலிகளாய் மாய்ந்தனரே! சூறை யெடுக்கக் கரிகாலன் னோடு செறிகளத்தில் நீறாய் விழுந்த நிலைபுலி யானவர் நெஞ்சுரத்தில் பூறு எடுக்கப் பிரண்டதை யாயிரம் படைஞரென சாறு படைத்த சரத்பொன்சே காவினார் சாற்றினரே! இந்திய மில்லையேல், சோனியாச் சோடி ரசீவ்பிரிவால் சிந்தனை நோய்ப்பட நின்றவள் ஆடிய நெட்டுரத்தால் கந்தக நச்சினைக் காய்ந்தவள் எற்றிடக் கண்டிலையேல் செந்தமிழ் மன்னன் துதித்த புலிகளே வெல்லுவரே! பாக்கிவி மானிகள் பண்ணிய கொத்துப் படர்குண்டால் தூக்கி எறிந்தவை எத்தனை யெத்தனைத் தேசநிலம் தாக்கி அழிக்கத் தருக்கரை வாங்கிய தத்தர்களால் நீக்க மறாது எரிந்தது வெங்களின் நீள்நிலமே! கூட்டி எரித்தனர் கொன்ற வழிநிலம் இல்லையதாய் மேட்டில் குவித்து வெலும்பும் சிதறிய வீழுறவைச் தோட்டி அழித்திட துப்பர வானதாய்த் தீமூட்டித் போட்டு எரித்தவன் பொய்யுரை எற்றிப் புகன்றனனே! பத்துமே கப்பல்கள் பாரதம் காட்டிய பாதகத்தால் மொத்தி எரிந்தது மீள்கடல் வேங்கையின் மெய்வருந்தச் சொத்து வெனப்புவி சேர்ந்த கனிநிலச் கோடுவெட்டி நத்து வெனவந்து இந்தியமே நாதி யழித்ததுவே! கெட்ட வரக்கரைக் கூடித் தழுவிய கொள்கையிலார் எட்டு முலகெலாம் ஊற்றிய கஞ்சியை உள்ளெடுத்துக் கட்டுப் புலியினைக் காட்டிக் கொடுத்தவக் கஞ்சலராய்க் பட்டுத் தெறித்தனர் பத்தி எழுதினர் பாவியரே! ஒற்றுநூ றாகிட உள்ளொரு கூட்டம் இயற்றுவித்துத் சுற்றொரு நாட்டிலும் சேர்த்திடக் கூடுமோ கூகையர்க்குப் பற்று தமிழ்குலம் பற்றிடாப் போக்கிரிப் பந்தலரைக் சுற்றி இராணுவம் நின்றுமே காக்கச் செறிந்தனரே! பெற்ற மடியிருந் துற்ற கரும்புலித் தேன்படையார் பொற்பி லுதித்தவர் பூந்தடம் வேங்கைப் பொறியுடையார் நற்றவ மாமணி நாயகன் அம்பியின் நாதமுளார் செற்ற புரத்துச் சுதந்திர வார்ப்பினர் சொல்லுவிரே! ஈழமா மானவர் ஏற்றுப் புலிநிலம் ஏற்றியவர் சூழப் பகையெழுந் தாடிய போதிலும் செங்களத்தின் ஆழம் துருவிய ஆர்வலர் மண்ணின் அடியுறைந்து வேழம் எனவுயிர் ஈர்ந்தார் மறவர் விதைப்பினிலே! வாழ்க அவர்உளம் வாழ்க அவர்நிலம் வாழ்த்துமே! ஏழ்கடல் ஆர்ப்பினும் எம்புலி வாழ்வர் இறைஞ்சுவமே! மூழ்கி யுறைந்து சுதந்திர மார்த்தார் துதித்தனமே! வாழ்கவே வேங்கை மணித்திரு நாடு வாழ்த்துதுமே! |
ஐந்தொகை(02)
எட்டரும் அமைதிப் படையும்!
(காவடிச் சிந்து )
அமைதிப் படையென ஆகி வந்தவர்
அஞ்சக் கொலைகளை ஆக்கி நின்றார்-பெரு
வஞ்சப் பொறிகளை மீட்டி வந்தார்-சனம்
குமையப் படவைத்துக் குருதிச் சிறகினைக்
குடிக்க வந்தவர் கொழுத்தி விட்டார்-தமிழர்
அடித்துத் துவையலாய் ஆக்கி விட்டார்!
இமயம் வெடித்திட எரிமலை பொங்கிட
ஈழச் சுவடினை அழித்து விட்டார்-நாம்
வாழும் உறவினை வாட்டி விட்டார்-நல்ல
சமயம் பார்த்துமே புலிகள் அழித்திடப்
போட்ட குழுக்களும் கூட வந்தார்-எங்கும்
கூட்டிக் கொலைகளால் மூடி வைத்தார்!
ஏற்று அழைத்தவர் இரசீவ் பிரபனை
ஏற்று ஏன்கதை யாற்றிநின்றார்-அட
கூற்றாய்ப் புலியர்க்கு ஏன்நுழைந்தார்-பல
வேற்றாய் அமைத்து விழுத்திச் சாவிட
வேறு வேறாகப் பிரித்தே வைத்தார்-அட
பாறா யிழுத்துசா படைக்க வைத்தார்!
நிரையாய்; கிடத்தித் தெருவில் மக்களை
நெரித்துக் கனரகத் தோடு கொன்றார்-அட
சரித்து மாதரை வல்ல ழித்தார்-படப்
புரைத்துப் போனது பாரதப் பூந்தடம்
பகலிலும் கொள்ளை அடித்து நின்றார்-படை
படலை படலையாய்ப் புகுந்த ழித்தார்!
புலியை அழித்திடப் போந்தவர் என்பது
பின்னர் அறிந்திடப் பார்த்தி டினும்-அவர்
சென்னி அரசியல் தெரிந்தி லரே-நாறிக்
குலையை அறுத்தவர் யேயாரின் கையிலே
சிரசில் அடிபெற்றுத் திரும்பி வந்தார்-புலி
அழிக்கப்போய் விழுந்து எழுந்து வந்தார்
எட்டப்பர் எட்டப்ப ரானவர் எங்கமண்
தட்டிப் பறிப்பவர்க் கேது செய்வார்;-தாய்
கெட்டுப் புதையிட வாது செய்வார்!-மண்
பட்டுப் போகிடப் பாதையில் முள்ளென
பங்குகள் போட்டுப் பரந்து வந்தார்-அந்தச்
சிங்களத் தோடும் துளைத்து நின்றார்!
அந்நிய னோடவன் அடிபு னைந்து
ஆட மலிந்தவன் தமிழ னைப்போல்-வேறு
சாதி யிலையென்போம் சரித்தி ரத்தில்-ஈழச்
செந்நிற மான சுதந்தி ரத்தில்
செத்தனர் காக்கையால் எத்த னையோ-அட
மொத்த விழுந்தனர் முத்து களே!
திலீபன் பூபதி நோன்பு அகிம்சையைத்
தேடி நடந்தவர் காந்தி என்போம்-ஈழம்
பாடிப் பறந்தவர் மேதை என்போம்-துன்பம்
மேலிட நின்றும் விவஸ்தை யில்லார்
விந்தியக் கோனார் அழித்து விட்டார்-வந்து
கந்தல்கள் ஆக்கினர் பறந்து விட்டார்
பாறி விழுந்திடப் பார ழிந்து
பட்டது சுதந்திர வேள்வி என்போம்-நாம்
கெட்டது அந்நியக் கூட்டில் என்போம்-தேசம்
மீறி எழுந்திடும் வேங்கை நெறிப்புலம்
வெங்கள் சுதந்திரம் எழுதி நிற்கும்-தாய்ப்
பொங்கும் தமிழினை வழுதி நிற்கும்!
ஐந்தொகை-03
கார்த்திகை தந்த
கரிகாலன் பிறந்தநாள்
(அகவல் )
தலைவா! தலைவா! தங்கத் தலைவா!
உலைவாய் எதிர்த்த உண்மைத் தலைவா!
மலையை உடைத்த மானத் தமிழா!
அலைவாய் கிழித்த அற்புதப் புதல்வா
நீயாய் எழுந்தாய் நெருப்பாய் இருந்தாய்!
சாயாப் புலியாய்த் துணிந்தே நடந்தாய்
மாயாக் கொடியோர் வதையை உடைத்தாய்
தாயின் தேச விலாசம் கொடுத்தாய்!
கண்ணின் ஒளியில் கதையின் சிறகில்
மண்ணை வடித்த மாபெரும் சிற்பி
அண்ணன் என்றும் ஆருயிர்த் தம்பி
வண்ணன் என்றும் வையமே பெற்றாய்!
நீயே தலைவன் நீயே தமிழன்!
தூய வாழ்வைச் சொல்லிய இறைவன்
பேயாய் வந்த பேடியைத் துரத்த
தீயாய் எழுந்த தேசப் புதல்வன்!
தமிழரின் தாகம் தமிழீ ழத்தை
அமுதெனச் சொன்ன அற்புதன் நீயே!
இமையாய் நின்ற இருவிழி யானாய்
சுமையை உடைக்கச் சுதந்திரம் ஆர்த்தாய்!
சுட்டு விரலின் திசையினிற் தமிழன்
தொட்டு விரிந்தான் சொல்லொடும் தானே!
பட்டு விழியைப் பார்புகல் உரையை
எட்டுத் திக்கும் இயம்பிட வைத்தாய்!
உன்னைத் தெரியார் உலகினில் இல்லை!
உண்மைத் தலைவன் உனைப்போ லில்லை!
உன்தள பதிகள் ஒவ்வொருத் தருமே
தன்னுயிர் கொடுக்கத் தாங்கினர் நிலமே!
மான மனைவி மறவர்ப் பிள்ளைகள்
தானைப் போரில் தந்தனை தலைவா!
சேனை மன்றில் சிந்திய சார்ள்சை
வானமண் போற்ற வைத்தனை பிரபா!
எங்கிருந் தாலும் எங்களின் தேசம்
தங்கத் தலைவனைத் தாங்கியே நிமிரும்
பொங்கும் தலைவன் பிறந்தநாள் தன்னில்
பூமிப் பந்து பூத்ததே பாரும்!
மாறாக் கொழுந்தே வைகை ஊற்றே
நீறே யாகா நிருத்தனே கோவே
கீறிய கோடு தாண்டிடாப் புலியை
நூறுபல் நூறாய் நூற்றவா வாழ்க!
இறந்ததாய்ச் சொல்லி எத்தனை பாடை
கறந்தனர் இந்திக் காட்டா றுகளே
துறந்துநீ ஈழம் சென்றிடாய் பறந்தும்
மறந்து போகநீ மாட்டிடாய் மாட்டாய்!
ஈனப் பிறவிகள் எத்தனைகும் மாளம்
பானத் தொடும்பா வைகளின் ஆட்டம்
தானைத் தலைவா தம்பிநீ வாவா!
மானக் கவுரி மானிடா வாவா!
பூனை இல்லை போட்டுத் தாளமாய்
ஏனைய குழுக்கள் எத்தனை எடுப்பு
கோனே உனக்குக் கீழிருந் தோடிய
பேனுக் குள்ளும் புதரின் வெடிப்பு!
இலட்சமாய் உலகம் திரட்டிய வேந்தன்
அலட்சியம் செய்யா அன்னைமண் மாந்தர்
வெட்டிவா என்றால் கட்டுமுன் புலியே
தொட்டுவா என்றால் துடைக்குமுன் வேங்கை
பிரபா, சூரியன், கரிகா லன்,பேர்
வரலா றெழுதிய வள்ளலே தம்பி!
குரலே கேட்கும் குவலயம் பிறந்தநாள்
திரண்டு அழைக்குதே தேசனே வருக!
ஐம்பதும் ஐந்தும் அகவைக் குமரா
சிம்மக் குரலே சீறியே வாவா!
வெம்பதி மீண்டும் வெளிக்கிடு தம்பி!
தெம்பிடும் தேசம் துள்ளுதே நம்பி!
-ஐந்தொகை தொடரும்..
|






