Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

ஈழகாவியம் - 11

மின்னஞ்சல் அச்சிடுக PDF

 


 

புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:13 நிகழ்காலம்.
தமிழீழம் மீதான ஒரு பார்வை

வேங்கைத் தேசம்!
(நெடிலடி அறுசீர் விருத்தம்)


தாழுற்று அடிமை மிஞ்சித்
தமிழீழம் கிடந்த போதில்
பாழுற்று வதைகள் இட்டுப்
பதைத்திட நின்ற போதில்
வீழுற்றுப் போமோ வென்றே
விறைத்திட நின்ற போதில்
தோழுற்று முகிழ்த்தான் எங்கள்
தேசத்தின் தலைவன் தானே!


கூழுக்குப் பயறு போலே
குழைதின்னும் ஆடு போலே
ஏழுக்கு எட்டுப் போலே
இருக்கைக்கு அடுத்தாற் போலே
சூழுக்கு வெளிச்சம் போலே
சீயெனும் எட்டர் போலே
சீழுற்றான் இல்லை மண்ணின்
சூரியன் பிரபா தானே!


தோளுக்கு வீரம் செய்தான்
துடிப்புக்குப் பாட மிட்டான்!
நாளுக்கும் அடிமை யில்லா
நாடிட எழுவாய் ஆனான்!
வாளுக்கு அரமே ஆனான்
வரலாற்றுப் புலியே ஆனான்
தாளுற்றுப் போகா மண்ணின்
சந்ததித் தூணே ஆனான்!


பாடென்றால் உலகம் பாடும்
பாரென்றால் பாரே பூக்கும்
ஏடெல்லாம் இவனே ஏடாம்
இயலெல்லாம் இவன்பண் பாடாம்!
நாடெல்லாம் இலட்ச மாந்தர்
நாயகன் ஆகக் கொண்ட
வீடெல்லாம் தமிழர் செய்த
வேந்தனே பிரபா மன்னன்!


ஐம்பதும் ஐந்தும் ஆகும்
ஆதவன் பிறந்த நாளில்
அம்பியை வாழ்த்து கின்றோம்
அகிலத்தே தமிழர் மண்ணின்
தம்பியை வாழ்த்து கின்றோம்
தாயவள் தமிழாள் பெற்ற
நம்பியை வாழ்த்து கின்றோம்!
நாயகா வாழ்க! வாழ்க!


என்றுமே யுலக னைத்தும்
எழுந்தனர் குடையொன் றாக
இன்தமிழ்ப் பிரபா தோன்றி
இயற்றுநல் லுரைசெய் வானாய்
வென்றிட வருவான் சோதி
முகத்தெழில் மன்னன் காணக்
குன்றென நிமிர்ந்த தம்மா
குவலயம் எங்கும் தானே!


மணிமுகத் தலைவன் பெற்ற
மகத்துவம் உலகம் எங்கும்
அணிமுகம் தமிழன் ஒன்றாய்
ஆக்கினான்! அதனாற் தானே
பிணிமுகச் சோனி யாளும்
பெருச்சாளி மூக்கா வென்ற
சுணையிலாத் தமிழ னோடும்
செத்தது ஈழ மண்ணே!


இறந்தனன் பிரபா என்று
இலங்கமும் இந்தி யத்தும்
அறைந்தனர் சேதி என்றால்
அணிமகன் நீறுற் றாய்ந்து
முறையொடும் ஒப்பம் வையா
முனியர சாட்சி யாளர்
இறைவனெம் தலைவன் சூர்யன்
இருப்பதைச் சொல்கின் றாரே!


பிறந்தநாள் கரிகா லர்க்குப்
புகலுநாள் தமிழர் கூட்டம்
சிறந்தநாள் வைய முற்றும்
செந்தமிழ் இனத்துத் தேனார்
மறையெனப் போதந் தந்த
மாபெரும் தலைவன் சொந்த
நறைமணில் இருக்கும் செய்தி
நடந்துவந் தவரே புக்கார்!


வரலாறு காட்டும் சூர்யன்
வரலாறு உள்ள மட்டும்
குரலாறுப் பிரபா சொற்கள்
கொடிகட்டும் உறுமி யார்க்கும்!
நிரையாகப் புலிகள் கோட்டம்
நிசமிடும் புலமார் மண்ணில்
வரையாக இளைஞர் பூங்கை
வளர்க்குதே பிரபாத் தோட்டம்!


ஒருவர்க்கு ஒருவன் என்க
உத்தமப் பிரபன் போலே
வருகின்ற வாய்ப்பு இன்னோர்
மனிதனுக் கில்லை யாமே!
சருகான எட்டர் கூட்டம்
சலசலத் தொன்றும் இல்லை!
பெருகிய புலத்து நெஞ்சில்
பொய்யர்க்கு இடமே இல்லை!


மாவீரர் பழித்தி டக்ளஸ்
மன்னாரிற் சொன்ன சேதி
ஓவியத் தமிழர் நெஞ்சில்
உதைத்ததே! கொடிய னாகிச்
சாவியைச் சிங்க ளத்துச்
சக்களப் படையில் வைத்துப்
பாவியான் முறுக்கும் மீசை
பதவிக்காய் வைத்த ஆசை!


அந்நிய நாடு பல்லாய்
அணுவொடும் இருக்கும் வல்லார்
வந்திறங் கியதாற் தானே
வாழ்நிலம் கொன்றார் பெண்கள்
சந்தெலாம் துவைக்கின் றாரே
சார்முகாம் தன்னில் வைத்து
மந்தையைப் போலே கொட்டி
வல்லுற வெடுக்கின் றாரே!


எட்டப்பன் ஆகச் சென்று
இந்திரி யெடுக்கின் றாரே
கெட்டவர் யாழ்ப்பா ணத்தில்
கிளர்ந்துபெண் கைப்பை யெற்றித்
துட்டவன் ஓடும் காலை
துரத்தியே பிடித்தார் அந்தப்
பட்டவன் இடக்ளஸ் காவல்
பார்த்திட வந்தான் என்றார்!


சூரியன் பிள்ளை வன்னிச்
சுடர்நிலம் நின்ற போதில்
பாரிடம் எங்கும் பெண்ணாள்
பகலிலும் இரவும் கூட
சேரிடம் திரிவாள்! தாயைச்
சேவித்து வருவாள்! ஒட்டுக்
கூரியத் தெழியர் நிற்கும்
கொள்ளிடம் தானே கேடாம்!


பண்பிலே சிறந்தான் ஒட்டர்ப்
பழியர்போல் வேசை யாடான்!
கண்டியில் நின்றால் என்ன?
கிரீன்லாந்து சென்றால் என்ன?
மண்டிடாச் சாதி செய்த
மானவன் பிரபா நெஞ்சம்
எண்திசை யெங்கும் வேங்கை
இயலொடும் தமிழன் நிற்பான்!


சாரிசா ரியாக நின்ற
சனக்கடல் விழிநீர்க் கங்கை
மாரியாய்ப் பொழிய நின்றார்!
மைந்தரே என்றார்! சிங்க
மூரியை உடைக்க வந்த
மொட்டுகள் சிதைகள் தோறும்
தேரிலே வந்து நின்றார்!
தூளியிற் சிரித்து நின்றார்!


போர்நின்ற மண்ணிப் போதின்
புலக்காண்டம் எழுதும் வேளை
கார்த்திகைக் கோவிற் பூக்கள்
கனிமழை ஈரக் கண்கள்
பார்த்துமா வீர ரோடும்
பகர்ந்திடும் தாயின் சொற்கள்
ஈர்த்துமண் எழுதும் வேளை
இந்தவோர் பதிகம் செய்தேன்!
இந்தவோர் பொழுதும் வையத்
தெழில்நகர் அரங்கம் தோறும்
செந்தமிழ் வீரர் வேங்கைச்
சிந்திய குருதி யோடும்
அந்திவான் சிவப்பே ஆக்கி
அணிநிலம் சிந்து பாடும்
குந்திடும் தேச மெங்கும்
கொடியிடும் ஈழம் தானே!


வெந்தது நிலமே வெந்து
வீழ்நிலம் சாம்ப லாகித்
தந்தது கொடிய செய்தித்
தாங்கொணாச் சாவில் நின்று
சந்ததி ஒன்று போகத்
தறித்தனன் இராச பக்சாக்
கந்தலன் என்றே காலம்
கண்டதே இந்த நாட்கள்!


ஊரொடும் செத்தார்! வீதி
உலாவரும் போதும் செத்தார்
நீரொடும் செத்தார்! தப்பும்
நெடுவழி யோடும் செத்தார்!
தூரொடும் பாம்பு கொத்தத்
துடித்துமே செத்தார்! மண்ணின்
போரொடும் செத்தார்! எங்கள்
பூமியின் புதல்வர் தானே!


இலட்சமாய் இறந்தும் என்ன?
இலட்சியம் இறந்தா போகும்!
மலக்குழு நின்றால் என்ன?
மானமண் முடிந்தா போகும்!
குலத்தொடும் துன்பம் துய்க்கப்
கிள்ளைதாய் தந்தை சாகக்
கலக்கமாய் நின்றால் என்ன?
காடையர் ஆட்சி போமோ?


இந்தவோர் பொழுது இன்று
இடித்திடச் செய்தி வந்து
நொந்திட மனது ஆடி
நோகிறேன்! நவாலி யூரில்
சந்திரப் பெண்ணாள் செத்துச்
சடலமே கிடக்கு தென்ற
பிந்திய தளத்துக் கோடு
போட்டதே வெந்து போனேன்!


இடக்ளஸ்சான் யாழ்ப்பா ணத்தில்
இராணுவத் தோடு நின்று
மடக்கிடப் புலிகள் என்று
மடையிடும் கொலைகள் வைத்துக்
கிடக்குதே என்றான் மகேஸ்
கேளது இவர்கள் கையில்
குடாக்கடல் இருக்கும் போதும்
கொலைநின்ற பாடே இல்லை!


மூதூரில் அகத்தி யற்கு
மூலமாய் நின்ற கோவில்
தீதாரால் அழித்து முற்றும்
துடைத்தழித் திட்டார் என்ற
பாதகச் செய்தி யோடும்
பார்த்தனம் தமிழர் பூமி
கோதியே எரித்தார்! கொற்றம்
கொண்டநம் தமிழர் செத்தார்!


ஆதியாம் கங்கு வேலி
அகத்தியன் கோவில் சம்பூர்க்
காதலாள் பத்ர காளிக்
கனிவிடும் கோவில் எல்லாம்
சோதியே இன்றித் தெய்வச்
சுடரெதும் இன்றிக் கொத்தி
நீதியே இல்லாச் சிங்கர்
நிலமெலாம் அழிக்கின் றாரே!


போர்முடித் திற்று என்ற
போர்வையைச் சொல்லிச் சொல்லி
கோர்வையாய் இந்துக் கோவில்
கூட்டமாய் அழிக்கின் றாரே!
பூர்வீகக் குடிலாம் தெய்வப்
போதனை கொண்ட மண்ணை
கூர்வராய்ச் சிங்க ளத்துக்
கொடியவர் அழிக்கின் றாரே!


இந்தியா வந்த தாற்றான்
இலங்காவார் திமிரில் நின்றார்
இந்தியா வந்த தாற்றான்
இந்துமண் அழிய வைத்தார்
இந்தமண் அழியு தென்றே
எழுந்துமே வேங்கை நின்ற
சுந்தர நிலத்தைக் கொல்லச்
சோனியாள் துணைபோ னாளே!


போரையே நிறுத்தி நின்ற
போதிலும் ரணிலார் ஆட்சி
சாரையே ஊர்ந்தாற் போன்று
சரித்திட்டார் கருணா வாக்கித்
தேரையே புலியின்; பக்கம்
திக்குமுக் காடச் செய்த
ஆரையால் வெந்தோம் ஆயின்
அதற்குப்பின் னாலும் நின்றோம்!


வந்திடும் வேங்கைக் கப்பல்
வரவர எரித்தார்! இந்தி
இந்தியத் தாரின் கையில்
எங்களின் விதியே போகத்
தந்திரம் செய்த போதும்
தமிழீழத் துணிவில் நின்று
மந்திரம் விடியல் ஆக்கி
மறவர்கள் எழுந்தே நின்றார்!


இருபது நாடு வந்து
எரிகுண்டு வீசி யெம்மைக்
கருநிலம் தீய வைத்தார்!
கனிமணல் மீது கொட்டி
எரியென விட்டார்! அய்ம்பத்
தாயிரம் மக்கள் சாக
நரியொடும் சோனி யாளே
நர்த்தன மிட்டாள் தானே!


போர்கண்டோம் வேங்கை யென்ற
புலிகண்டோம்! பரணி யோடும்
நேர்கண்டோம்! நிசமே வென்ற
நிலத்தொடும் அரண்கள் வைத்தோம்!
யார்கண்டார் கருணா வென்ற
யாசகன் சிங்க ளத்தின்
மோர்தின்ன ஆசைப் பட்டான்
முடிந்தது தமிழன் வாழ்வே!


எட்டப்பம் வென்ற தாற்றான்
இடியுற்ற தேசம் கண்டோம்!
துட்டனாம் சிங்கத் தோட்டித்
தீயரின் வஞ்சம் கண்டோம்!
எட்டநில் என்ற போதும்
எங்களின் காக்கை தோன்றக்
கெட்டது போரின் கோடு
குவிந்தது இரத்தக் கோடு!


போரினாற் தமிழர் மண்ணே
பொறித்தது தேசக் கோடு!
நேரிய வரையாய்ச் சாரல்
நிறுவிய பிரபா தன்வாள்
பாரிலே கொடுத்தே அஞ்சல்
படைத்தனன் இந்தப் போது!
சேரிடம் புலத்தி னார்க்குச்
சென்றதே வெற்றி யோடு!


வீரத்திற் குறைவே இல்லை!
வேட்கைக்குச் சாவே இல்லை!
பேரத்தில் வந்த நோர்வேப்
பொதிவைத்தார், பயனே இல்லை!
நேரத்தைத் தவற விட்டோம்!
நீதியிற் சாய்ந்த தாலே
தூரத்தைத் தவற விட்டோம்!
திரும்பிடத் தேசம் வைப்போம்.



வெண்பா!

கொட்டுண்டு மண்கருகிக் கூடாய்க் குலங்கருகிக்
கட்டுண்டு சாவாடக் கண்டுமாகிக்-கெட்டவர்க்கைக்
கட்டுண்டோம்! ஆயினும் காதற் திருநிலத்தை
எட்டும் படியெழுவோம் ஏறு!


பதிவு:02-12-2009

- புதியபாரதி

குறிப்பு: மகேஸ்-யாழ்ப்பாணத்தில் நடக்கும் கொலைகளை நாடாளுமன்றத்தில் சொல்வேன் என்ற நாடாளுமன்ற உறுப்பினர், சொல்லிய மறுநாள் கொல்லப்பட்ட மகேஸ்வரன்.

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
சிவம் பரமு அவர்களுக்கு.
2 திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2009 17:17
புதியபாரதி
ஐம்பெருங்காப்பியங்கள் வரிசைக்குள் உட்புகுத்திக் கொண்டேன். வரலாறு இலக்கிய ஆராய்வுப் பதில் இல்லை அது. நான் எழுதியவைகள் சரிபார்த்து ஆவணம் ஆக்கப்படும். இப்பொழுது வருவதெல்லாம் பார்வையின் வெளிப்பாடே. வெண்பா பற்றிய உங்கள் விளக்கங்களும் சரியானவையே. அசை சீர் தளை இவற்றிலும் இன்னும் பிற காரணங்களிலும் பிழைகள் இருக்கலாம். கணனிக் கோர்வையில் எழுத்பபட்டவை.
மண்ணின் வயம் ஏற்பட்ட கண்ணீரின் கோடுகளை மறைய முன்னம் எழுதும் பணியே இது.
ஈழ காவியத்திற்குத் தொடக்கம்-உதாரணம் சிலப்பதிகாரம்-முடிவு இருக்க வேண்டும் என்று சிலர் கருத்துப் பகர்ந்நததினால் அப்படியான ஒரு உள்நோக்கம் கொண்ட ஒரு பதிலைத்தான் தந்தேன். பிழைகள் திருத்தப்படும். உங்கள் கருத்துக்கள் சிறந்தவை. இந்த எனது வெளிப்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்ன வரைமுறைகளுக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கான உங்கள் கருத்தை ஈழநேசனுக்கு எழுதுங்கள். உங்கள் கருத்து என்னை சரிப்படுத்தும்
முன்னுக்குப் பின் முரண் இருக்கிறது
1 ஞாயிற்றுக்கிழமை, 06 டிசம்பர் 2009 13:57
சிவம் பரமு
புதிய பாரதியவர்களுக்கு,நீங்கள் எழுதிய பதிலைக் கண்டேன். அதிர்ச்சியுற்றேன்.நீங்கள் குழம்பிப் போயிருக்கிறீர்கள்.வார்த்தைகளிலும் அசைகளிலும் முன்னுக்குப் பின் முரண் இருக்கிறது.//ஈழகாவியத்திற்கு ஒரு தொடக்கம் கிறிஸ்துவிற்கு முன்பிருந்தே ஆரம்பிக்கவெண்டுமென்பதை நான் அறிவேன்?/ என்பது உங்கள் அறியாமை. அது அபத்தமான, ஆபத்தான வாதமாகும். அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தம் கூட இல்லை.ஏன் அதை முடிச்சுபோட்டுக் குழப்புகிறீர்கள்.அதுமட்டுமன்றி
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும்.இவற்றுள் நளவெண்பா அடங்கவில்லை.
மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்திப் புலவர் என்பவராவார். இதன் பெயர் சுட்டுவது போல், இந் நூல் வெண்பாக்களால் அமைந்ததெனினும் நீங்கள்சொல்வதுபோல் இது மட்டுமே தமிழ் வெண்பா அல்ல.. குறள் வெண்பா,
சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா,இன்னிசை வெண்பா,சவலை வெண்பா என்று பல வகை வெண்பாக்கள் உண்டு.
இன்னிசை வெண்பா என்பது நான்கு அடிகள் கொண்ட ஒரு வெண்பா வகை. நேரிசை வெண்பா என்பதும் நான்கு அடிகளைக் கொண்ட ஒரு வெண்பா வகையே. ஆனால் வெண்பாக்களில் நான்கு அடிகளைக் கொண்டு, நேரிசை வெண்பாவுக்கு உரிய இலக்கணங்கள் அமையாத ஏனைய வெண்பாக்கள் அனைத்தும் இன்னிசை வெண்பாக்கள் ஆகின்றன.
நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படுகின்றது. இவ்வெண்பா வகையின் அடிகளில் ஒரே வகையான எதுகையோ (ஒரு விகற்பம்) அல்லது பலவகை எதுகைகளோ (பல விகற்பம்) வரலாம். பஃறொடை வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும் என்றும் அதற்கு மேற்படின் அது கலிவெண்பா எனப்படுகிறது..தேமா,புளிமா,கருவிளம்,கூவிளத்தைவிடவும் காய்ச்சீரில் நாலசைவென்று ஒன்று உண்டு,எது தமிழ் காப்பியங்கள் என்று உங்களால் அறியமுடியவில்லை என்பதுவருத்தம் தருகிறது.
வெறும் புலம்பல்களினால் ஆன உங்களின் பாக்கள் இன்னமும் பலவற்றைத்தொட வேண்டும். அதற்கு இன்னமும் நீங்கள் அறிந்துகொள்ளப் பலவுண்டு என்பதை நான் வருத்ததோடு குறிப்பிட்டேயாகவேண்டும்.

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி