புலத்துக் காண்டம்.
அத்தியாயம்:12 நிகழ்காலம்.
சிறீலங்கா மீதான ஒரு பார்வை
(வெண்பா)
புலத்தி லிருந்திப் பொழுதில் இலங்கா
மலக்கா டுறைவதைப் பார்த்தேன்-அலக்காகி
துட்டன் பெயரைத் துருவித் தனக்குத்தான்
இட்டான் மகிந்தனே ஏல்!
ஐம்பத்து ஆறில் அரிந்த மதச்சாதி
வெம்பத்தா றாண்டாயும் வீழ்த்துகிறார்-இம்பத்தில்
இலட்சம் தமிழர் இராசபக்ச னாற்சா
நிலத்தே யடைந்தார் நினை!
சிங்களர்க்கு மத்தியிலும் சேராக் கரையோரச்
சிங்களவர் என்றும் சிலபிரிவாம்-எங்கும்
தமிழன் அழிப்பார்க்குத் தானாட்சி வைக்கும்
உமிழர்க்குச் சாதியில்லை ஓர்!
கதைப்பர்! சிரிப்பர்! கருணைக் கடலாய்ப்
புதைப்பில் நடிக்கும் பொறியார்!-மதப்பிற்
சிறிதளவும் மாறார்! சிறிலங்காத் துட்டர்
பறிப்பர் தமிழ்மண் பரந்து!
தேசத்து வாழ்வியத்தைத் சேர்ந்த தமிழரினைக்
கூசாமல் கொன்ற கொடும்தீயர் -நாசகுண்டு
வீசிநின்று மண்ணை விசமாய்க் குடியழித்த
பாசிசமே சிங்கப் பதர்!
கற்பழிக்கச் சொன்னான்! கடைந்த பெருங்கடலில்
கொற்றமிழர் வார்க்குருதி கொட்டென்றான்-சுற்றுமனை
மீதும் வயல்நிலமும் மேவிவரும் சொத்தெல்லாம்
கோது படைக்கென்றான் கோத்தன்!
கொல்வதற்குக் கட்சிக் கொடியெல்லாம் ஒன்றாவார்
சொல்தமக்கே வைத்துச் சிறப்பிடுவார்-எல்லோரும்
ஒன்றான கூடே யிருந்தமிழர் வாழ்நிலத்தைப்
பன்றிகளாய்த் தின்றார் பறித்து!
கலவரத்தை இட்டுக் களித்தார்! தமிழர்
நிலங்கள் பறித்தாராய் நின்றார்-அலமந்து
ஓடோடத் தாக்கி இனம்சாகக் கொன்றாடிப்
பாடாக்கி விட்டார் பதர்!
துட்டருக்கு வால்பிடித்துத் தூக்கித் தமிழினத்தின்
எட்டரென வருவோர்க்கே எல்லாமும்-துட்ட
கெமுனென்பான் வஞ்சகமாய்க் கொல்லவெல் லாளன்
அமைத்த தளபதியே ஆப்பு!
கரும்புலியாய் நின்று கடுப்பர்கை யாளாய்த்
துரும்பான காரணமெம் தோல்வி-கருணாவான்
எட்டப்பன் என்றே இரும்புலிகள் வரலாற்றில்
நட்டுவைத்த கல்லென்றே நாறும்!
காட்டிக் கொடுத்த கயமையினாற் தானின்று
கூட்டினிலே குட்டிக் கிழிவுற்று-நாட்காட்டி
ஒவ்வொன்றாய்ச் சேதி இணையத் தளங்களிலே
கவ்விவர வைத்தான் கசப்பு!
மாடோ! வரக்கனோ! வையமதில் இட்லர்பின்
கோடாது வந்த கொடியவனோ?-பூடாகப்
போட்டு எரித்தான்! புலிகளென மக்களையே
காட்டேறிப் பக்சக் கடை!
நாராய ணன்னாம் நரிவந்து பக்சருக்குப்
பூராயம் வைத்துப் புகட்டினனே-வீராய
நின்ற புலிநிலத்தை நீறாக்கி வைப்பதற்காய்
என்றும் வருவான் இவன்!
சீனாவும் இந்தியமும் ஈரான்பா கிஸ்தானும்
ஊனாகப் பிய்ந்த திரச்சியமும்-கூனியராய்
வீறாடி நின்ற விடியல் நிலம்முழுகச்
சேறாடிச் சென்றார் செருப்பு!
இரச்சீவின் மண்டை யிலங்கர் அடியால்
உரச்சியது ஒன்றுமில்லை ஓர்வீர்-மரம்பாய்ந்த
இந்தியக் கையர்க்கு ஈழ அழிப்பொன்றே
முந்துதீ வைப்பின் முடிப்பு!
துப்பலுக்கும் தீர்வு தொடுக்கான் இலங்கனென்ற
சப்பனை யோராமற் சாதந்தார்-எப்படியும்
வென்றே விடுவோம் விளைமண்ணை என்றிட்ட
கொன்றைப் புலிநாடு கொன்று!
இராணுவத்தால் மொத்த இருப்புக் குலைந்தோர்
திராணியெதும் இல்லாதே திக்கில்-பிராணியென
நின்றுமனை பல்லாய் நெருப்பர் குந்திவிட
ஒன்றுமிலை யானார் உயிர்ப்பு!
கனரகத்தை ஏவிக் கடுகமண் உள்ளே
சனத்தை முடித்தனரே சாற்றீர்-மனம்போல
முள்வேலி வன்பொறிக்குள் மூட்டித் தினம்சாக
உள்வேலி யாடும் உயிர்ப்பு!
தாய்முன்னே பிள்ளையைத் தாடர்கள் கற்பழிக்கப்
பாய்ந்தாள் தடுக்கவே பாவியாய்-பேய்நாட்டு
எத்தபடை யாலேதான் எங்கள்தாய் மெய்வாடிப்
புத்திசுவா தீனமுற்றாள் பேசு!
தாயிறந்த போதும் தனதன்னைச் சாத்தெரியாச்
சேயிழுத்துத் தந்தமுலை யுண்டதுவே-நாயிழுத்துப்
போகச் சிதறுசதைப் பூமி இடுகாடாய்
ஆகப் படைத்தார் அரக்கம்!
அலறுகின்ற சத்தம் அழுகையொடும் பெண்ணார்
புலையரொடும் போராடும் பேதைகள்-கொலையுண்டு
நீர்க்கரையில் பூதவுடல் நீந்திவரும் காட்சியிலே
வேர்ப்பகைவன் நிற்பான் விளைந்து!
மாணிக்க கங்கையில் வண்ணநீ ராடியோர்
காணத் தடிவைத்துத் தாக்கினார்-பூணாடை
ஏதுமின்றிக் கையை இறுக்கிப் பிணையிட்டுச்
சாதந்த காட்சிதந்தார் சாற்று!
ஏதிலியாம் புத்தி இளைத்த இளையானை
மோதிக் கடல்தன்னில் மூழ்கவிட்டார்-நாதியற்ற
மக்களெலாம் எங்கும் மடையர்ப்ப டையார்க்கும்
கைக்குள்ளே சாகின்றார் காண்!
காணொளியும் கைப்படமும் கண்டவரின் சாட்சியொடும்
மாணவதை யெல்லாம் வரக்கண்டோம்-நாணமின்றிப்
போர்க்குற்றம் கண்ட புடையன் இராசபக்சா
வார்த்தான் கொடுமை வதை!
போர்க்குற்றம் சொல்லிப் பிடித்து அய்நாவில்
வார்க்குற்றம் சொல்லி வருகையிலே-ஆற்றாது
இந்தியமும் சீனா இரச்சியமு மெல்லாமும்
உந்துதடை யிட்டாரே உள்!
பிசாசுக்குத் தப்பிவந்து பேய்க்குள் அழிந்த
விசாதிபோல் ஆனதிந்த வேளை-உசாராய்ச்
சரத்பொன்சே காவார்ச் சரக்காய் அவிழ்க்கும்
பரப்பும் தமிழழிப்பே பார்!
மால்பட் டழிந்தனர் மாதரார்! அந்நியர்
கால்பட் டழிந்தது கனித்தமிழ்மண்-சால்சிறையில்
கைதியாய்; நின்றும் கனித்தமிழப் பாவிகளைப்
பெய்தடித்தார் காடைப் பிறப்பு!
புலியில்லை என்றால் புதரெலிகள் எல்லாம்
கிலியின்றித் துள்ளுமதே கேளாய்-பலிதந்த
துட்டனையே கட்டிக் கிசோரான் முத்தமிட்டுப்
பட்டையடி வைத்தானே பார்!
இரவிரா சன்சபையை ஏற்றசிறீ காந்தா
பிரபா விலையென்றே பீற்றிச்-சரமாக
முத்துத் தமிழர் முடித்த இராசபக்சாப்
பித்துக்கை யாளானான் பேசு!
போர்முடித்த னென்று புதைத்துத் தமிழர்களை
ஊர்குடித்த வன்மம் உலங்காதார்-நார்வைத்துக்
காலம் முழுக்கக் கழிந்தகொலை யாளர்க்குச்
சூலம் கொடுத்தார் தினம்!
எட்டப்பன் கெட்ட இனச்சாதி என்றேதான்
கட்டபொம்ம னிற்கதையும் கண்டோமே-துட்டதமிழ்
ஒட்டர் உறவாடி ஊத்தை விலைக்காகிச்
சுட்டாரெம் மாந்தரென்றே சொல்!
புலியென்று போட்டுப் பிடித்தாரைத் தாக்க
எலியெட்டர் அந்நியர்கை ஏற்றுக்-கொலையிட்டார்
யோசப்பன் நிமிலன் சிவராம் ரவிராசன்
தேசநடே சன்னென்றே தேடி!
குட்டியொடும் வீற்றுக் குடிப்பவனாய் மனையாளை
எட்டப் பிரித்தானி யோட்டிவிட்டான்-கெட்டவனாய்
நின்ற கருணா நிலப்பே யிலையென்றால்
ஒன்றுமிடர் காணோம் இயம்பு!
இலங்கா கொலைநாடு எம்தமிழர் சாவில்
மலங்கப் பதைதந்த மாடர்-அலக்காகி
ஐம்பத்து ஆறிருந்து ஆருயிர்இ லட்சமாய்ச்
சம்பலிட வைத்தாரிச் சாதி!
அல்லை எமதுநிலம் கந்தளா யெங்கவனம்
எல்லாக் கிழக்குமண்ணும் எங்களதே-இன்னும்
மணலாறு புத்தளம் வார்நீர் கொழும்பெல்லாம்
அணங்காள் தமிழின் அகம்!
மகாவம்சம் பொய்யாய் மழிப்பர் வரைந்தார்
தகாத வரலாறே தந்தார்-அகம்கண்டி
கோட்டை பொலநறுவைக் கொற்றமெல் லாளன்கை
நாட்டரசம் நின்றதெலாம் நாம்!
எங்கள் நிலத்தை இடித்துக் கொலையாடிச்
சிங்கர் எடுப்பதுவே யின்னுமாம்-தங்கநிலம்
இன்றும் இடிந்தே இனவழிப்புப் பக்சரினால்
நின்றழிப்பைக் காட்டும் நிசம்!
இந்தப் புலையர் இருக்கவிடார் என்றேதான்
முந்திச் செல்வா முழக்கமிட்டார்-எந்தையர்
வல்லாண்மை கொள்ளாது வாழ்ந்த படியாற்றான்
கொல்லாட்சிக் குட்பட்டார் கொள்!
எங்கும்பார் காக்கை இனமழித்தான் எட்டப்பன்
பொங்கும் தமிழைப் புகையவைத்தான்-சங்கிலியின்
சங்கம் ஒலிக்கச் சரித்த எழியவன்போல்
இங்கும் கருணா எமன்!
சூளைமேட் டுக்கொலையில் சிக்காது ஓடிவந்து
காளைஇ டக்களசும் காணவைத்தான்-வாளோடும்
சிங்களவர் கைக்குள் செறிந்து இனமழித்த
எங்களவர்க் குண்டே இழி!
கொள்ளையும் கற்பழிப்புக் கூட்டும் கொலையாடும்
கள்ளர் மலிந்த கடையர்கள்-முள்வேலி
யாழ்ப்பாணம் என்றே மொழிந்த மகேசனைச்
சூழ்ந்தெவனோ சுட்டான் தெரி!
நிமலரா சன்தன்னை நெப்போலி சாய்த்த
சுமையாய் வழக்குண்டு சொல்வீர்-அமைவாய்
இலங்கர் அரக்கமொடும் ஏற்றவன் தப்பிப்
புலத்தில் மலிந்தானே பின்!
விடுதலைக்கு வந்தாரை வீழ்த்தப் பகையார்க்
கெடுகையாய்ப் போனவர்கள் கீழோர்-விடுதலைக்கு
நின்ற புலியார் நிலத்தைப் பிரிவிட்டுக்
கொன்றதுவே ரச்சீவின் கேடு!
வல்லர்கைக் குட்பட்டு வாழினத்தைச் சாவிட்டுப்
புல்லர்கைக் குட்பட்டுக் கேடானோம்-வல்புலியைக்
கொன்றாட இந்திக் கொடுக்கரொடும் புத்தமொடும்
நின்றானெட் டப்பன் நெருப்பு!
வேங்கைப்போர் மண்ணின் விடியலுக்கே என்றாகித்
தாங்கும்போர் கண்ட தமிழீழம்-ஆங்கெதிரிச்
சட்டிக்குள் நின்று சதிராய்க் குதிரைவிட்ட
மட்டர்பால் வெந்தும் பதைப்பு!
ஊடகத்து மாந்தர் ஒழியக் கருக்கொண்ட
கேடகத்தார் ஆட்சி கிளர்;ந்ததுவே-பாடெனவே
லசங்கனைக் கொன்றும் திசைநாய கத்தின்
கசந்த சிறையோடும் காண்!
பண்டா அரசோடும் பல்லாயி ரத்தமிழர்
துண்டாட வீழ்ந்தார் துடித்தழவே-எண்பத்தி
மூன்றும்சே யாரும் முனியான் இராசபக்சா
ஞான்றும் எரியிட்டார் நாற!
சிங்கக் கொடுங்காடு சீவி அரிந்தாடும்
துங்கர் மலிந்தநிலத் தேசென்பேன்-அங்கக்
குருதி இரத்தாறு கொட்டத் தமிழர்களைச்
சருகா யெரியிட்டார் சாக!
காசுபணம் கப்பம் கசக்கிப் பிழியநின்ற
மூசுவார் வைத்த முடிச்சுகளே-நாசரெனத்
தேசச் சுவரெழுதும் தீயர் இராசபக்சா
பாசத் தரசென்றார் பார்!
இட்லர்க்கும் மேலாய் இராசபக்சா கொன்றாடிக்
கெட்ட வரக்கனெனக் கூறவைத்தான்-துட்டரவர்
வஞ்சிக் குலத்தாரை வாட்டிக் கற்பழிக்கும்
நஞ்சருக்கு வாராதோ நாசம்!
முடிப்பு வெண்பா!
அல்லையும், கந்தளாய், முள்ளிவாய்க்கால், மண்ணடங்காய்
அல்லைபிட்டி, பிந்துணுவ, செம்மணியாய்-வல்லார்
வெலிக்கடை, கொக்கட்டி,த் தேர்கலை மட்டும்
பலியிட்டார் காடைப் பதர்!






