காகத்திற்கே “அல்வா“ கொடுத்த நரி
ஒருநாள் நவக்கிரகங்களை விருந்துக்கு அழைத்தது.
நவக்கிரகங்களும் நட்சத்திரங்களொன்றுக்கும் தெரியாமல்
தனித்தனியே போய் நரியின் இருப்பிடத்தில் ஒன்று சேர்ந்தன.
நரிக்கோ பெருத்த சந்தோசம்.
நவக்கிரகங்கள் எல்லாம் ஒன்றாய் கூடி
விழுந்துபோன விடிவெள்ளிகளை மீண்டும்
வானத்துக்கு கொண்டுவர நரியிடம் ஆலோசனை கேட்டன.
நரியோ வந்த வரத்திலேயே ” வரலாறுகளெல்லாம்
நமக்கு வேண்டாம். தன் அண்ணனான ராஜ ராஜாவின் ஆட்சியை
கட்டியெழுப்புவது பற்றி கதைப்போம்“ என்றது.
நவக்கிரகங்கள் ஒன்றையொன்று முகம் பார்த்தன.
“அப்போதான் அடைத்து வைத்திருக்கும் வரிகளை
பரிகளாக்கி ஒடவிடலாம்” என்று நரி ஆசைவார்த்தை கூறியது.
” நவக்கிரகங்களே! நவக்கிரகங்களே!
வரம் நிறைவேற வேண்டி நட்சத்திரங்கள் உங்களிடம்
நேர்த்திக்கு வைத்த சில்லறைகள்
குவியல் குவியலாக இருக்கிறதாமே
அதைப் போய் சீக்கிரம் எடுத்துவாருங்கள்”
என்றது நரி்.
நவக்கிரகங்கள் மௌனமாய் இருந்தன.
நரியோ சத்தமாய் ஊளையிட்டுவிட்டு
தானும் ராஜராஜாவும் வேட்டையாடிய காட்டை
நவக்கிரகங்களுக்கு சுற்றிக்காட்டச் சொல்லி
பன்றிகளுக்கு கட்டளையிட்டது.
போன இடமெல்லாம் நரியாரும்.. ராஜராஜாவும்
சாப்பிட்டுப்போட்டிருந்த எலும்புத்துண்டுகளை
நவக்கிரகங்களும் கண்டிருந்தன.
வரும்வழியில் தன் தினசரி உணவுக்காக
நரியார் அடைத்துவைத்திருந்த விடிவெள்ளிகளில்
சிலவற்றை மட்டும் பன்றிகள்
நவக்கிரகங்களுக்கு காட்டின.
எல்லாம் முடிந்து நரியார்
நவக்கிரகங்களுக்கு நல்ல விருந்தும் கொடுத்து
வழயனுப்பிய பிறகுதான் நட்சத்திரங்களுக்கு
எல்லாமே தெரிந்தன.
நட்சத்திரங்கள் கோபத்தோடு நவக்கிரகங்களுக்கு சொல்லின.
” விடிவெள்ளிகளின் விடுதலை
எமக்கும் வேண்டும்.
ஆனால்...
வானத்தையே பறித்தெடுக்கப் பார்க்கும்
நரியின் சூழ்ச்சிக்குள்
நாம் சிக்குண்டு போவதை
நட்சத்திரங்கள் நாங்கள் விரும்போம்.
நவக்கிரகங்கள் நீங்களும் விரும்பக்கூடாது.
விடிவெள்ளிகளும்
ஒருபோதும்... ...
விரும்பவே விரும்பாது.”
*** *** *** ****
தீபிகா.
30-06-2010.






