பார்க்கவேண்டும் போலிருக்கிறது
கேப்பாபுலவு வயல்வெளியை.
விட்டுவிட்டு விரிந்திருக்கும்
காடுகளை...
விடாமல் வீசிக்கொண்டிருக்கும்
வன்னிவான் காற்றை...

சருகுகளை நிறைத்துக் கொண்டு
வரிசையாய் உயர்ந்திருக்கும்
தேக்கந் தோப்புக்களை...
வீழ்ந்தும் வீழாமல்
வீதி முழுக்கப் பரந்திருக்கும்
அந்தப் பட்ட மரத்தை...
அலையலையாய் அசைந்தாடும்
அழகான இளம்பச்சை நடனத்தை...
மௌனமாய் வளைந்தோடும்
நீண்ட குளிரோடைகளை...
அதில் முங்கிமுங்கி எழும்பும்
உள்ளாடை மட்டுமணிந்த ஊர் இளைஞர்களை...
பின்னாலிருக்கும் கிடுகுக்கொட்டில்
தவறணையை...
அதிலிருந்து காற்று வாங்கும்
பீடி ஊதும் மனிதர்களை...

புளுதியள்ளித் தெளிக்கும்
நெளிந்து வளையும் பயணவீதியை...
சனங்கைளை அள்ளித் திணித்துக்கொண்டு
சரிந்துவிழுமாற் போல்
உறுமியுறுமி போகும்
மண்ணெய் பேரூந்தை...
சகதிகளுக்குள் சேற்றுக்குளியலிடும்
அழுக்குப்படிந்த எருமைகளை...
அறுகம்புல் வரம்புகளில்
வரிசை போட்டு ஓய்வெடுக்கும்
வெள்ளைக் கொக்குகளை...
வண்டிகளை நிறுத்திவிட்டு
வடலிகளின் மறைவில்
அவசரமாய் சிறுநீரிறைக்கும்
வழிப்போக்கர்களை...

வீதியை அடைத்துக்கொண்டு
மாடுகளை வைத்து
ஊர்வலம் நடத்திப் போகும்
வெற்றிலை போட்ட கிராமத்தவனின்
முகத்தை...
வேரினை நீரினில் நனைத்துக்கொண்டே
நிழல் பரப்பும்
அருவிக்கரைப் பெருமரத்தை...
மூச்சுவாங்க மூச்சுவாங்க
மிதிவண்டிகளை மிதிக்கவேண்டிய
அந்த ஏற்றத்தை...
காடுவெட்டி நட்டுவைத்த
வாழைத் தோட்டங்களை...

எப்போது?
இனியெப்போது அச்சிமின்றி
போய் பார்க்கும் நாள் வரும்?
அன்று தான்
என்னால் எண்னிப்பார்க்க முடியும்
மீதமுள்ள உறவுகளையும்.
-- முற்றும் --
*** வன்னிப்பெருநிலத்தின், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள
புதுக்குடியிருப்பு --- முள்ளியவளை கிராமங்களுக்குரிய
வயல்வெளியினூடான குறுகிய தூரப்பாதை
அமைந்துள்ள இடமே கேப்பாப்புலவு ஆகும்.
படைப்பு - தீபிகா






