
அவர்களின் குண்டுகளால்
சுடலையாகிப்போனது நிலம்!!
மொழியறுத்து முண்டங்களாகிச்
சிதைந்தழிந்தன சவங்கள்,
சாம்பல் மேட்டிற்குள்
கனன்று கொண்டிருக்கிறது
இன்னமும் அணையா நெருப்பு !
எல்லாத் திசையிலும் முட்டி மோதுகிறது
கேட்பாரற்றுக் கூக்குரலிட்டு
இறந்த அபலைகளின் குரல்,
இன்னமும் மீந்திருப்பவை
தாய்நாடு அதுதான் என
நாக்கூசாமல் சொல்கிறார்கள்!!
தாய்நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??
எதிரியை வரவேற்கிறவன் அவர்களால்,
எல்லாமிழந்த ஏதிலிகளுக்கும்
பரிமளத்தைலம் பூசுகின்றான்.
தேசத்தை எரித்தவனுக்கும் பொன்னாடை !!
எரிந்து வந்தவனுக்கும் பொன்னாடை !!
உயிரோடு புதைந்தவர்களுக்காய் இரங்கற் கூட்டம்
முடிந்த கையோடு போர்வெற்றி புகழப்படுகிறது.
தாய் நாடு அதுதான் என்றால் ஏன் அது இப்படி??
ஒப்பனைக் காரர்கள் சாயம்
பூசத் தொடங்கி விட்டார்கள்!
மனித உடலங்கள் சூடடிக்கப்பட்ட
பூமியில் கொண்டாட்டத்தோடு உலா வருகிறது உலகம்.
புதிய புதிய கடவுள்கள்
இடம் மாறுகின்றார்கள்.
மண்மேட்டில் வன்னி
எரிந்தழிந்து போனபோது
பார்த்துக் கொண்டிருந்த தாய்நாட்டு வீரர்கள்
ஆளப் புதைந்த தமிழிச்சியை
புதுவையில் மீண்டும்
இழுத்து வந்து மலர்மாலை
போடுவதாகச் சொல்கிறார்கள்.
அதற்காகக்குழல் ஊதுகின்றார்கள்,
எதற்கும் எப்போதும் ஊத வல்ல மகுடிகள்.
அதுவும்சரி, இதுவும் சரி என்கிறது அவர்களது அரசியல்.
தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??
தமிழெனும் பெயரால்
துடிக்கத் துடிக்க அழிக்கப்பட்டவர்க்காய்....
ஒரு அங்குல ஊதுபத்திகூடக்
கொழுத்திடமுடியா மொழிவல்லோர்கள்
மலர்மண்டமும், மணிமண்டபமும்
தமிழுக்காகப் புதுவையில் கட்டுவோம்
எனப் பூச்சாண்டி காட்டுகின்றனர்.
முகாமிட்ட பிச்சைக்குள் இன்னமும்
கதிகலங்கும் தமிழிச்சிகளின் மூச்சுக்காற்றால்
சுக்கிர திசையாம் அரசிற்கு......
அகதிகளைக்காட்டி வியாபாரம்
பெருக்கிடும் காலம் இது என்கிறது இந்தியச் சோதிடம்.
தாய்நாடு அதுதான் என்றால் ஏன்அது இப்படி??
எல்லோரும் புள்ளிவைக்கின்றார்கள்.
தமிழர்களின் சாம்பலில் கோலம் போட......
பனிப்பாலையில் வாழத்துடிக்கிற ஒட்டகங்களைப்போல்
தமிழரைக் காக்காமல்,
தமிழைக் காக்கத்துடிக்கிற தேவர்களே...
தேவ கன்னிகைகளே...
மாநாடு முடிகிற போது
தமிழன் இருந்த மண்மேடும் தொலைந்து போயிற்றா???
என்றும் ஆராயுங்கள்






