
ராஜபக்ஸவை சந்திக்கவரும்
ராஜ தந்திரிகளே வருக!
வாருங்கள்.
நீங்கள் எடுக்காத புகைப்படங்களா?
குலுக்காத கைகளா?
குற்றங்களின் நாயகனோடும் குலுக்குங்கள்.
உற்றுக் கவனியுங்கள்.
அவர் தோளில்தொங்கும் சிவப்புத்துண்டில்
எம் ரத்தக்கறை படிந்துளது.
அழுது தலையிலடித்து
அட்டைகள் பிடித்து ஆர்ப்பாட்டம் நடத்தி
இடிவிழப் போகுமெம் இழவுவீடுகளை
காப்பாற்றக்கேட்டு கதறினோம்.
கைவிரித்தீர் சிலர்.
கண்ணை மூடிக்கொண்டு பால்குடித்தீர் சிலர்.
தொட்டில்களையும் ஆட்டிக்கொண்டு
பிள்ளைகளையும் கிள்ளினார்கள் சிலர்.
முன்கதவால் வந்து முத்தமிட்டுக்கொண்டே
பின்கதவால் வந்து பிரளயங்களுக்கான
ஒத்திகைகள் பார்த்தார் சிலர்.

நீங்கள் அரசாங்கங்கள்.
உங்கள் நலனில் அக்கறையாயிருப்பீர்கள்.
அனைத்துலக ராஜதந்திரமிருக்கும்.
அயல்நாட்டுக் கொள்கையிருக்கும்.
ஆயிரமாயிரம் போட்டிகளிருக்கும்.
ஆனால்...
அப்பாவிகள் ஐயா அப்பாவிகள்.
அப்பாவிகளெங்கள் உயிர்கள் மீதேறித்தானா
உங்களுறவுகளை வலுப்படுத்த வேண்டும்?
எங்கள் மண்டையோடுகளை எடுத்துத்தானா
நீங்கள்
பொன்னாடைகள் போர்த்திக்கொள்ள வேண்டும்?
இப்போ
எல்லாம் முடிந்து
மாண்ட நம்முறவின் ஓராண்டும் முடிந்தபின்னர்
எங்கள் வாசல் வருகிறீர்கள்.
மொட்டையடிக்கப்பட்ட எம் தேசத்திலே
நாம் பதுக்கிவைத்த முட்டைகளில்
மயிர்பிடுங்க வருகிறார்கள் பலர்.
பரீட்சித்துப்பார்க்க கொடுத்தனுப்பிய
ஆயுதங்களின் வல்லமை பற்றியறிய
வருகிறார்கள் சிலபேர்.
ஏதும்செய்ய நாதியற்றிருப்பினும்
எமைவந்து பார்த்துச் சிரித்து
படமெடுத்துப் போகிறார்கள் சிலர்.
எல்லாம் பறித்தெடுத்து எம்மை பரதேசிகளாக்கி
முட்கம்பிச்சிறைக்குள் வெறும் பட்டிகளாய்
அடைத்துவைத்துக் கொண்டு
எம்நிலத்தை அடைவுவைக்கும் நோக்கில்
உங்களுக்கு பேட்டி கொடுப்பார்கள்.
எடுங்கள்.
எல்லாம் நல்லபடி நடப்பதாய்
ஏதோ ஈழத்தமிழன் இதுவரையில்லா
ஆனந்தத்திளைப்பிலே படுத்துக்கிடப்பதாய்
எலும்புத்துண்டொன்று தாடிசொறிந்தபடி
கதையளக்கும். கேழுங்கள்.
பூமாலை போடுவார்கள். கழுத்தை நீட்டுங்கள்.
புத்தகோவில் கூட்டிச்சென்று
பிக்குமாரின் கைகளாலே அலரிப்பூக் கொடுத்து
உங்கள் காதினிலும் வைக்கச் சொல்லுவார்கள்.

காட்டத்திட்டமிட்டு சாட்சிகளழித்து
தயாராக்கி வைத்திருக்குமெம்
கனவுதேசத்தின் பகுதியொன்றைக் காட்ட
கூட்டிப்போவார்கள். போங்கள்.
போகும்வழியில் சிலவேளைகளில்
" WELCOME TO VANNI " எனும்
கறுப்பெழுத்து மஞ்சள் பலகை
துப்பாக்கியால் சல்லடையாக்கப்பட்டு
ஓட்டை விழுந்த எழுத்துக்களோடு
கம்பம் முறிந்து கிடக்கலாம்.
கவனியுங்கள்.
அவர்கள் காட்டுவதை மட்டும் பார்க்கும்
வெள்ளைப் பொம்மைகளாகி கிடக்காமல்
கறுப்புக் கண்ணாடிவழி உம்கண்களை
பரவவிடுங்கள்.
எப்படியேனும் உம்பார்வைகளில் தட்டுப்படும்.
பட்டைசிதறிய மரவுடல்கள்.
பாதியில்லா கூரைகள்.
மொட்டையடித்த தென்னைமரங்கள்.
தலைகீழாய்த் தொங்கும் கோபுரக்கடவுள்.
ரத்தமூறிய சேலைத்துண்டு.
தவறவிட்டுப்போன ஒற்றைச்செருப்பு.
ஒருபக்க வில்லை நொருங்கிய கறுப்புக்கண்ணாடி.
காயம்பட்ட தெருநாய்.
கருகிப்போன தடிகளோடு ஏழைவீடுகள்.
அதற்குள்
பல்லிளித்தபடியான மண்டையோடுகள்.

பாருங்கள்.
எல்லாம் பார்த்துவிட்டு
ஏசி(a/c) அறைக்குள் ஏலக்காய் வாசமிட்டு
எங்களூரின் சிங்கறால் பொரித்துப் போட்டு
ஒரு மஞ்சள் பிரியாணி தருவார்கள்.
சாப்பிட்டுப் போங்கள்.
வெள்ளைத்தோலும்
மஞ்சள் கண்களுமாயிருப்பினும்
நீங்களும் எமைபோல் மனிதங்கள்தானே!
எங்கள் சதைகளிலிருந்து தெறித்தோடிப் பரந்த
சிவப்புக்குருதி தானே உங்களுக்கும்.
எமைப்போலவே... உமக்கும்
குடும்பங்களிருக்கும். குழந்தைகளிருக்கும்.
குஷன் கதிரைக்குள் சுருண்டு படுக்கும்
குட்டைவால் நாய்க்குட்டியுமிருக்கும்.
எல்லாம்...
எல்லாம் தொலைத்தொருநாளில் கிடப்பின்
எப்படியிருக்குமென சிந்திப்பீர்?
பீசாக்கும்...பேகருக்கும்...
வழியற்றுக் குளிரில் வெளியலையும்
வாழ்க்கைவரின் விழிகளிலுங்களுக்கும்
கண்ணீர் வரும் காண்.
உங்கள் வேசங்களும், வேதங்களுமான
உத்தியோக மனசுகளை தூக்கிப்போட்டு
பாசங்களோடு படுத்துறங்கி உழலும்
முன்னிரவின் கணமொன்றில்
எம்மகதி முகாம் குழந்தைகளின்
ஏக்கமுள்ள முகங்களை நினைத்துக்கொண்டு
உறங்குங்கள்.
உங்களையறியாமல் அணைப்பீர்கள்.
உங்கள் குழந்தைகளை.
அதுகாணும் எங்களுக்கு.
எம்வலி புரிந்து கொண்டீர்களென்ற
ஒற்றைச்சந்தோசம் போதுமெமக்கு.
உள்ளோரும்....உலகோரும்....
வல்லோரும்....எல்லோரும்....
நாம் வணங்கிநின்ற கடவுளரும்....
கைவிட்டுப்போன பாவிகளானோம்.
யமனேறிக் குதித்து மிதிக்கும்
நெடுந்துயர் வாசிகளானோம்.
வாருங்கள்.
வந்தெல்லோரும் பாருங்கள்.
ஐயா அக்காசியே!
தெற்காசியாவின்மீது இத்தனை அக்கறையா?
உங்கள் பொற்காசிலள்ளிப் போட்டு
முருங்கனிலும்...பரந்தனிலும்...
விதைப்பண்ணைக்காய் அடிக்கல் நாட்டினீர்களாம்.
நடக்கட்டும்.
இன்றில்லையெனினும்...
என்றோ ஒருநாள்
எம்
தசையெடுத்து நீங்கள் போட்டு மூடிய
சதைப்பண்ணைகள் நிலம்வெடிக்கும்.
எம்கண்களுக்குள் விதைத்திருக்கும்
கனவுப்பூ மொட்டவிழ்க்கும்.
புரண்டுறங்கும் காலவெளி மீண்டும்
உருண்டு நிமிர்ந்தெழும்.
முற்றும்.
படைப்பு -
தீபிகா.
21-06-2010






