Flash Image

Flash Image

புதியன இருபது

கவிதை பெட்டகம்

 

குறைசொல்லி மனசுகள்

பச்சை முடிகள் பழுத்துதிர்ந்து போக நிலத்தில் விழுந்த பெருநிழலைத் தொலைத்து வெறும் குச்சியெலும்புகளை மட்டும் சுமக்கும் மொட்டை விருட்சமாயிருக்கிற என்னிடம் இப்போதும் இருக்கிறது. அதே தளராத உறுதி. அதே உழைப்புக்கான ஊக்கம். அதே தன்னலமற்ற தியாகம்.

 

மாறியிருக்கிற ஊரும்... மீதியிருக்கிற உறவும்...

அரைவயிறு உணவுகளோடும் அடையாள இலக்கங்களோடும் இருந்த அகதி வாழ்வை முடித்துக்கொண்டு நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம். அடிமை வாழ்வை ஆரம்பிக்க.

 

நட்சத்திரங்களற்ற வானம்

மேகங்களிடம் நட்சத்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு பொட்டில்லா காதலி முகமாய் வானம் வெறிச்சோடிக் கிடக்கிறது.

பரப்பிகள்

Eelanation.com: Tamil Magazine

விளம்பரம்

Eelanation_add

கடந்த முப்பது நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை

எங்களூர் மீள்குடியேற்றம் - ஓர் அனுபவப் பகிர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இன்றுடன் எங்களூரிலிருந்து நாங்கள் இடம்பெயர்ந்து 695 நாட்கள் ஆகிவிட்டன. எப்போதுதான் எங்களூரில் நாம் மீள்குடியேற்றப்படப் போகிறோம் என ஏங்கிக்கொண்டிருந்த எமக்கு ஈற்றில் அந்த அறிவிப்பும் வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான செம்மலை மற்றும் அளம்பில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த தினத்தன்று மீள்குடியேற்றப்படுவார்கள் என்ற செய்தி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினால் விடுக்கப்பட்டிருந்தது.

யூலை எட்டாம் நாளன்று காலை ஆறு மணி முதலே வவுனியா நகரசபை மண்டபத்திற்கு அருகே தங்களது உடமைகளுடன் முகாமுக்கு வெளியே உறவினர் மற்றும் நண்பர்களது வீடுகளில் வசித்துவந்த குறிப்பிட்ட இந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வந்து குவிய ஆரம்பித்துவிட்டார்கள்.

 

துரித கதியில் பதிவுகள் மேற்கொள்ளப்பட, ஐ.ஓ.எம் நிறுவனத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் நாங்கள் ஏற்றப்பட்டோம். தொடரணியாகப் புறப்பட்ட இந்தப் பேருந்துகள் இரண்டு மணிநேரத் தொடர்ச்சியான பயணத்தின் பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் தனது பயணத்தை இடைநிறுத்திக்கொண்டன.

 

இந்தப் பயணத்தின் போது வித்தியானந்தாக் கல்லூரியிலிருந்து 300 மீற்றர் தூரத்திலிருந்த மாவீரர் துயிலுமில்லம் புள்டோசர்கள் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோது கண்கள் குளமாகின. இருந்த இடமே தெரியாமல் அது அழிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு தை மாதத்தின் முதல் பகுதி என நினைக்கிறேன், மாலை மங்கிய நேரத்தில், அருகே எறிகணைகள் விழுந்து வெடித்துக்கொண்டிருக்க, ஒலிபெருக்கிகள் எதுவும் பயன்படுத்தப்படாமல் இந்தத் துயிலகத்தில் இறுதி வித்துடல் விதைக்கப்பட்ட நிகழ்வினை நான் நினைத்துப் பார்க்கிறேன். துயிலுமில்லத்திலிருந்து அண்ணளவாக 1.5 கி.மீ தூரத்தில் முள்ளியவளை நெடுங்கேணி வீதி வரை அப்போது இராணுவத்தினர் முன்னேறியிருந்தார்கள்.

 

ஒட்டுசுட்டானுக்கும் முள்ளியவளைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்புப் பிரிவினர் நடுகை செய்த பல்லாயிரக்கணக்கான தேக்க மரங்கள் தங்களது இலையினை உதிர்த்திவிட்டு பராமரிப்பாளர் எவருமற்ற நிலையில் நிமிர்ந்து நின்றன.

chemmalai

 

வித்தியானந்தாக் கல்லூரி வளாகத்திற்கு நாங்கள் மதியம் 12.30 மணிக்கே சென்றடைந்துவிட்டோம். அரசாங்க அதிகாரிகள் ஒருபுறமும் இராணுவத்தினர் மறுபுறமுமாக அங்கும் பதிவுகளைத் தொடர்ந்தார்கள். தனித்தனியேயும், குடும்பம் குடும்பமாகவும் புகைப்படம் எடுக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

 

மீள்குடியேறவந்த மக்களிடையே விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாராவது இருக்கிறார்களா என இராணுவப் புலனாய்வாளர்கள் துருவித் துருவி விசாரித்தார்கள். புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது விபரங்களையும் இராணுவப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்திக்கொண்டனர். இரவு பத்து மணியைத் தாண்டிய பின்னரும் இந்தப் பதிவுகள் தொடர்ந்தன.

 

அன்றிரவு வித்தியானந்தாக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை 'மகிழ்விக்க' எனக்கூறி படையினர் இசை நிகழ்வு ஒன்றை அவசர அவசரமாக ஒழுங்கு செய்திருந்தார்கள். உடினடியாகத் தயார் செய்யப்பட்ட மேடையில் படையினரது இசை நிகழ்வு ஆரம்பமானது. 'வாடா மாப்பிளை... வாழைப்பழத் தோப்பிலே...' என்ற புதிய பாடல் முதல் 'நூறு வருசம் இந்த மாப்பிளையும் பெண்ணும்தான்...' என்ற பழைய பாடல்வரை பலதரப்பட்ட பாடல்களை அரைகுறைத் தமிழில் படையினரே பாடினர்.

 

அந்தப் பாடல்களுக்கு ஆடவருமாறு எங்களூர் பெண்களை அவர்கள் வம்புக்கிழுத்தார்கள். என்னடா இது, இந்தத் துன்பத்தை யாரிடம் சொல்லியழ என்றாகிவிட்டது எங்கள் நிலை. முதல்நாளே பெண்களுடன் வம்பா? சிங்களப் படையினரால் சூழப்பட்டிருக்கும் எங்களூரில் பெண்களின் நிலை என்னவாகும் என்பதைக் கட்டியம் கூறுவதாய் அமைந்தது இந்த நிகழ்வு.

 

ஈற்றில் மறுநாள் காலையில் நாங்கள் எங்களது ஊர்களுக்கான பயணத்தினை ஆரம்பித்தோம்.  மன வேதனையினையும் உழைச்சலையும் தருகின்ற நீண்ட பயணத்தின் பின்னர் நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம்.

 

அண்ணளவாக இரண்டு ஆண்டுகளாக கிராமத்தில் மக்கள் எவருமில்லை. தலையற்ற மரங்களும் கூரையிழந்த வீடுகளும், மண் திட்டுக்களாகிவிட்ட மண் வீடுகளும், எருக்கலைகளால் நிறைந்த முற்றங்களும், குண்டுச் சிதறல்களால் சல்லடையிடப்பட்ட வீட்டுச் சுவர்களும் எங்கும் தெரிந்தன. அனைத்துமே அழிக்கப்பட்டிருந்தன. இது எங்கள் ஊர்தான் என உறுதிப்படுத்தும் வகையில் ஊராரின் மாடுகள் கட்டாக்காலிகளாக வீதிகளில் படுத்திருந்தன.

 

தென்னை மரங்கள் தறித்து விழுத்தப்பட்டு, அதன் குற்றிகளைக் கொண்டு அருகருகாக இராணுவக் காப்பரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.  வீடுகளிலிருந்து கழற்றி எடுக்கப்பட்ட ஓடுகள் மற்றும் மரந்தடிகளைக் கொண்டும் படையினர் தங்களது நிலைகளை அமைத்திருக்கிறார்கள்.

 

அளம்பில் சந்தியில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் நிலையும் அதுதான். துயிலுமில்லம் எனக் கூறுவதற்கான அடையாளம் எதுவும் அங்கில்லை.  துயிலுமில்ல வளாக மூலையில் அமைக்கப்பட்டிருந்த மண்கிண்டிமலை நினைவுத்தூபியின் இருந்த இடமே தெரியவில்லை. அந்த இடத்தில் 'மக்கல் கடை' என்ற அரைகுறைத் தமிழில் சிங்களப் படையினர் தேநீர்ச்சாலை ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.

 

நாம் ஏற்கனவே நினைத்ததைப் போல செம்மலை மகாவித்தியாலயத்திற்கு அருகாக இருந்த பெரிய அரசமரத்தடியில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் பாடசாலை இடைவேளை நேரத்தில் மாணவர்கள் இந்த மரத்தின் கீழேயே எட்டுக்கோடும் கிட்டிப்புள்ளும் விளையாடுவார்கள். ஏன் சங்கீதப் பாடம்கூட இந்த மரத்தின் கீழேயே நடக்கும்.

 

அரசமரத்தின் மறுபுறத்தில் கிராம மக்கள் வைத்து வழிபட்ட சூலம் அப்படியே இருக்கிறது. அருகேயுள்ள காப்பரணுக்கு காவல் கடமையினை மாற்றுவதற்காக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கடற்கரையிலுள்ள முகாமிலிருந்து வரும் படையினர் அனைவருமே அரசமரத்தடியில் புதிதாக வைக்கப்பட்டிருக்கும் புத்தரை வணங்கிவிட்டுத்தான் செல்கிறார்கள்.

 

'அதுவும் கடவுள்தானே. என்னசெய்வது, இனி உடைத்தெறியவா முடியும், உடைத்தெறிந்துவிட்டு எங்களால் வாழ முடியுமா' என புத்தர் சிலையினைக் கண்ட ஆசிரியர் ஒருவர் என்னிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இன்னொரு பெண்ணோ, 'பாடசாலைச் சிறுவர்கள் விளையாடும் இடம் இதுவென்பதால் சிறார்களின் மனதை மாற்றும் வகையில் படையினர் திட்டமிட்டே இந்தச் சிலையை நட்டிருக்கிறார்கள்;' என்றார்.

 

பாடசாலையின் பிரதான கட்டடத்தில் முன்னர் வரையப்பட்டிருந்த தமிழீழ வரைபடமும், அங்கு எழுதப்பட்டிருந்த பாடசாலையில் கற்று பின்னர் வித்தாகிப்போன மாவீரர்களின் பெயர் விபரங்களும் கறுப்பு பெயின்ரினால் அலங்கோலமாக அழிக்கப்பட்டிருந்தன.

 

பாடசாலைக்கு அருகேயுள்ள குளக்கரையினை அண்டிய பகுதிக்குச் சென்று பார்த்தபோதுதான் போரின் பின்னர் மக்கள் வன்னியில் விட்டு விட்டு வந்த வாகனங்களின் நிலை என்னவெனப் புரிந்தது. பார ஊர்திகள், பேருந்துகள், ஹையஸ் ரக வான்கள், உழவு இயந்திரங்கள் மற்றும் உந்துருளிகளின் எஞ்சிய பாகங்கள் அங்கு சிதறிக்கிடக்கின்றன. இந்த வாகனங்களைப் பகுதி பகுதியாகப் பிரித்து பெறுமதியான பொருட்களை கழற்றி எடுத்துவிட்டு எஞ்சிய பொருட்கள் அங்கு வீசி எறியப்பட்டிருக்கின்றன.

 

குளக்கரையில் துருப்பிடித்த நிலையில் தூக்கி எறியப்பட்டிருக்கும் உழவு இயந்திரத்தின் பெட்டி ஒன்றில் 'உருத்திரபுரம்- கிளிநொச்சி' என்ற முகவரி எழுதப்பட்டிருந்தது. இந்த உழவு இயந்திரம் உருத்திரபுரத்தினைச் சேர்ந்த யாருடையாதாகவோ இருக்கவேண்டும் என நம்புகிறேன். ஆனால் இன்று அது சிங்களவனுடையதாகிவிட்டது.

 

நான் மீள்குடியேற்றத்திற்காகச் சென்றிருந்தபோது முல்லைத்தீவைச் சேர்ந்த நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவருக்குச் சிறிது சிங்களம் தெரியும். முல்லைத்தீவு நகரில் நிலைகொண்டிருக்கும் லெப்டினன் தர படையதிகாரி ஒருவர் வியாபாரியான எனது நண்பரை அணுகியிருக்கிறான். சிங்களத்தில் எழுதப்பட்ட ஒரு துண்டை அவரிடம் கொடுத்து இவ்வளவு பொருட்களும் தன்னிடம் இருப்பதாகவும்,  யாருக்காவது இந்தப் பொருட்கள் தேவையெனில் தொடர்புபடுத்திவிடுங்கள், மலிவு விலையில் கொடுப்போம் என்றிருக்கிறான்.

 

அந்தப் பட்டியலில் இருந்த பொருட்கள் என்ன தெரியுமா? சோலர்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள், நீர்ப் பம்பிகள், பல வகையான வாகனங்களின் றேடியேற்றர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் என பல பொருட்கள் அதில் இருந்தன. அனைத்துமே தமிழனின் சொத்துக்கள்.

 

மறுநாள் காலையில் பேருந்து ஒன்று உறுமும் சத்தம் கேட்டுக் கண்விழித்தேன். மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டிருக்கும் பாடசாலைச் சந்தியினையும் தாண்டி அந்தப் பேருந்து எங்கு பயணிக்கிறது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அயலவர்களிடம் விசாரித்தேன், அவர்களுக்கும் தெரியவில்லை. பின்னர் காலை 11 மணியளவில் இதேபோல இன்னொரு பேருந்து நாயாற்றுப் பக்கமிருந்து வேகமாக வந்து பாடாசலைச் சந்தியில் நின்றதும் சில படையினர் இறங்கினார்கள். 'சிறீபுர' என பேருந்தின் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்தது.

 

இந்தப் பேருந்துகள் எங்கிருந்துதான் வருகின்றன என அறியும் ஆவலில் அருகேயிருந்த காவலரணில் இருந்த படையினனுடன் சிங்களம் தெரிந்த ஒருவரின் உதவியுடன் உரையாட முற்பட்டேன். மணலாற்றில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டிருக்கும் பதவியா மற்றும் சிறீபுர ஆகிய பிரதேசங்களுக்கு முல்லைத்தீவு நகரிலிருந்து தினமும் மூன்று பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக அறியமுடிந்தது. பெரும்பாலும் படையினரே இந்தச் சேவையினைப் பயன்படுத்துகிறார்கள்.

 

மணலாற்றுக் காட்டில் விடுதலைப் புலிகள் முன்னர் அமைத்திருந்த வீதியினை அகலப்படுத்திய படையினர் முல்லைத்தீவிலிருந்து மணலாறு வழியாக பதவியா செல்லும் வீதியாக அதனை மாற்றியிருப்பதாக அந்தப் படையினர் கூறினான்.

 

யூலை 10 ஆம் திகதியன்று நாம் மீள்குடியேற்றத்திற்காகச் சென்றிருந்த வேளையில் தண்ணிமுறிப்புக்குளத்திற்கும் மணலாற்றுக் காட்டுக்கும் மேலால் கிபிர் ரக யுத்த விமானங்கள்  விமானங்களை இரண்டு முறை வட்டமிட்டதை அவதானிக்கமுடிந்தது. போரின் போது பழக்கப்பட்டுப்போன இந்த ஒலியினைக் கேட்ட கிராம மக்கள், 'புலி' இன்னமும் காட்டில் இருக்கிறதா என தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

 

மக்கள் மீள்குடியேற்றப்பட்ட மறுதினம் காலையில் செம்மலையின் குறு வீதிகளில் 'கேழிக்குஞ்சு' என அரை குறைத் தமிழில் கூவியபடி சிங்கள வியாபாரிகள் சிலர் நடமாடித்திரிந்தார்கள். இவர்கள் பதவியாவைச் சேர்ந்த சிங்களவர்களாம், மீள்குடியேறிய மக்களிடத்தில் வியாபாரம் செய்ய வந்திருக்கிறார்கள். அதேபோல மாலையில் 'எல்ப்' ரக வாகனமொன்றில் பதவியாப் பகுதியிலிருந்து வந்த சிங்களவர்கள் கண்ணாடி அலுமாரிகளை விற்பனைக்காகக் கொண்டுவந்திருந்தார்கள்.

குடியேறி ஒருநாள் கூட ஆகவில்லை, அதற்குள் சிங்களவர்கள் தங்களது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

 

செம்மலையினைப் பொறுத்தவரையில் 45 வீதத்திற்கும் அதிகமான வீடுகள் கூரையிழந்த நிலையிலுள்ளன. கட்டிக் குறையில் இருந்த வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் என்பன முற்றாக உடைக்கப்பட்டு அவற்றின் சீமெந்துக் கற்கள் பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றன. ஏன் இரண்டு மாதங்களின் முன்னர் அரச அதிகாரிகள் இப்பகுதிக்கு விஜயம் செய்த போது முழுமையாக இருந்த வீடுகளின் கூரைகளைக் கூட இப்போது காணமுடியவில்லை. இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்புடனும், அனுமதியுடனும் பதவியாவிலிருந்து வாகனங்களில் வந்த சிங்களவர்களே தமிழர்கள் தேடித் தேடிச் சேகரித்த இந்தச் சொத்துக்களை அபகரித்துச் சென்றிருக்கிறார்கள்.

 

மீன்பிடியையும் விவசாயத்தையும் நம்பி வாழும் இந்தக் கிராமத்தில் இன்னமும் மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் புல்மோட்டையிலிருந்து வரும் முல்லீம்களதும் சிங்களவர்களதும் மீன்பிடிப்படகுகள் செம்மலை மற்றும் அளம்பில் கரையோரப் பகுதிகளில் வந்து மீன்பிடியில் ஈடுபடுபதை கரையிலிருந்து அவதானிக்க முடிகிறது.

 

கிராமத்தின் மீள்குடியேற்றத்திற்கென பெரும்பாலான குடும்பங்கள் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களுடனும் வந்திருந்தபோதும் மீள்குடியேற்றப் பதிவுகள் முடிந்ததும் வயது வந்த பெண் பிள்ளைகளை ஊரில் காணமுடியவில்லை. இவர்களை மீண்டும் வவுனியாவிற்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ அனுப்பிவிட்டு பெரும்பாலும் பெற்றோர்கள் மாத்திரமே ஊரிலுள்ளார்கள்.

 

இரவில் கொடூரக்குணம் கொண்ட வெறியர்களாக மாறிவிடும் சிங்களச் சிப்பாய்களிடமிருந்து தங்களது பிள்ளைகளைக் காப்பதற்கே பெற்றோர்கள் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள். இரண்டு வாரங்களின் முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் அருகிலிருந்த காவலரணிலிருந்த படையினர் சிலர் குறிப்பிட்ட வீடு ஒன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களுடன் பாலியல் ரீதியிலான சேட்டைகளில் ஈடுபட முற்றபட்டிருக்கிறார்கள்.

 

அங்கிருந்தவர்கள் கத்திக் கூச்சலிட தாங்கள் கொண்டுவந்த 'ரோச் லைற்றையும்' போட்டுவிட்டு இந்தச் சிப்பாய்கள் தப்பிச்சென்றிருக்கிறார்கள். பின்னர் ஊர்ப் பெரியவர்கள் அந்த 'ரோச் லைற்றை' எடுத்துக்கொண்டு பிரதேசத்திலுள்ள படைமுகாமின் பெறுப்பதிகாரியிடம் முறையிட 'ரோச் லைற்றில்' இருந்த அடையாள எண்ணை வைத்து குற்றம் புரிந்த படையினர் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கையாக குறித்த சோதனைச் சாவடியில் இருந்த படையினர் வேறு சோதனைச் சாவடிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

 

மீள்குடியேற்றம் இடம்பெற்ற மறுநாள் காலையில், ஏழு அல்லது எட்டுப் படையினர் அடங்கிய குழுவொன்று ஒவ்வொரு வீடு வீடாக வந்து தனித்தனியேயும், குடும்பம் குடும்பமாகவும் மீண்டும் புகைப்படம் எடுத்ததோடு பதிவுகளையும் மேற்கொண்டார்கள். சிங்களம் தெரிந்த கிராமத்தின் பெண்ணெருவருடன் அங்கு படையினர் உரையாடிக்கொண்டிருந்தார்கள். '1996ஆம் ஆண்டு முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதலைத் தொடர்ந்து உயிருக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடிவந்து, சிறுகாட்டில் மறைந்திருந்த படையினரைப் புலிகளிடம் காட்டிக்கொடுத்து அவர்களை அடித்துக் கொன்றது நீங்கள் தானே! அனைத்தும் எங்களுக்குத் தெரியும்' என அந்த படையினன் கோபாவேசத்தோடு கூறினார்.

 

 

கட்டாக்காலிக் கால்நடைகளின் பராமரிப்பு முதல் பாடசாலையின் நிர்வாகம் வரை கிராமத்தின் அனைத்து நிர்வாகங்களையும் படையினரே கையில் எடுத்திருக்கிறார்கள்.

 

கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதேச படைத் தளபதிக்குமிடையிலான சந்திப்பொன்று   இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் ஊரிலுள்ள கட்டாக்காலிகளைப் பிடித்து உரியவர்களுக்கு ஒப்படைக்கும் வகையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்தக் குழுவின் இணைப்பாளராக இராணுவ அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அதேபோலவே பாடசாலையினை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை வழங்குவதற்குப் 'பொறுப்பாக' இன்னொரு படை அதிகாரி நியமிக்கப்பட்டார்.

 

எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு நாட்டினது இராணுவத்தின் பொறுப்புக்களும் கடமைகளும் இவை தானா என்ற கேள்வி என் மனதுள் எழுந்தது. இந்தக் கூட்டத்தில் கருத்துரைத்த பிரதேசப் படையதிகாரி, 'இந்த நாள்வரை நீங்கள் எவ்வாறிருந்தீர்கள் என்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் வரும் நாட்களில் எங்களது அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நீங்கள் செயற்படாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும்' என எச்சரிக்கும் தொனியில் கூறினார்.

 

'கிராமத்தில் எங்களுக்குத் தெரியாமல் அணுவும் அசையக்கூடாது' என அகங்காரத்துடன் அந்த அதிகாரி வெடித்துத் தள்ளினார். ஊரில் இடம்பெறும் அனைத்துப் பொது நிகழ்வுகளுக்கும் தன்னை அழைக்கவேண்டும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகளில் சிங்கக்கொடி கட்டாயம் ஏற்றப்படவேண்டும் என்றும் கோரினார்.

 

 

மேய்ப்போர் அற்ற மந்தைகளாக, தட்டிக்கேட்க எவருமற்ற மனிதர்களாக, பெற்றோரை இழந்த பிள்ளைகளாக மாறிவிட்ட ஈழத் தமிழனின் நிலையினை எண்ண நெஞ்சம் வெடித்தது. எங்கோ பிறந்தவன், எங்கோ வளந்தவன் எங்களை வந்து ஆள நினைக்கிறான், அச்சுறுத்துகிறான். எங்களூரின் மத்தியில் புத்தர் சிலையை நட்டுவிட்டு அதனையும் வணங்குமாறு வற்புறுத்துகிறான். எம் தமிழ்ப் பெண்களை வம்புக்கிழுக்கிறான்.

 

எங்களூர் சிறார்களின் கல்வியில், ஊரக மேம்பாட்டுப் பணிகளில் மூக்கை நுழைப்பதற்கு இவனுக்கென்ன யோக்கியதை என எழுந்து நின்று கத்தத் தோன்றுகிறது.  கத்தலாம், நான் உரத்துத் கத்தலாம். ஆனால் உயிர்வாழ்வதற்கு என் உயிரிருக்காது. இதுதான் வன்னியில் மீள்குடியேற்றப்படுபவர்களின் மன நிலை. இப்படித்தான் வழவேண்டும் என்றல்லாமல், விதி விட்ட வழியில் இருக்கும் காலத்தில் எப்படியோ வாழ்ந்துவிட்டுப் போவோம் என்ற மனநிலையே இவர்களிடத்தில் இருக்கிறது.

 

 

உங்கள் கருத்தை தெரிவிக்கும் பகுதி

Phonetic Tamil Typewritter Tamil Bamini English
உங்கள் பெயர்:
தலைப்பு:
கருத்து:
கருத்துக்கள் (2)
சுக்கு நுாறாகிப்போகிறதே.........
2 ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூலை 2010 04:03
செம்மலை மண்மகள்
வெடித்து சிதறுகின்றது என் மனம்
நான் தடம் பதித்து நடை பயின்ற மண்
உருமாறிப்போனதே..............
கடவுள் விதி என்று சதி செய்தது ஏன்????????
இந்த நிலை மாறாதா??????????
எப்படி???
1 வியாழக்கிழமை, 15 ஜூலை 2010 01:39
செம்மலையான்
வலிக்கிறது வாழ்க்கை.
எரிகிறது நெஞ்சம்.
வழிகிறது கண்ணீர்.
என்ன செய்யப் போகிறோம்?
எங்கள் விதிகளை மாற்றியமைத்தல்
எப்போ சாத்தியமாகும்?

வாசிக்கவே கஸ்ரமாக இருக்கிறது.
வாழப்போகிறவர்கள்
எப்படி...???

வாசகர் கருத்துக்கள், category: "கட்டுரை"

wishes எண்ணங்கள் பிரம்மாக்கள்
vaaimaiya vellum வாய்மையே வெல்லும்
arumaiyana karuthu அன்பே தீர்வு
நல்லதொரு புத்தகம் பற்றிய அறிமுகம் ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
karuvelanizhal ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
manggai.blogspot.com ஸெர்யோஷா புத்தக விமர்சனம்
Well done திராவிடன் & Eelam ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
Aiya Vannkam ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
ரிக் வேதம் ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்
கண்டுபிடிக்கவே முடியாத களவு ஆரியர் திராவிடர் என்னும் பூச்சுற்றல்கள்

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

இணைய வழி வேலைவாய்ப்புகள் (அறிவித்தல்)

உங்கள் வாக்கு

குமரன் பத்மநாதன் மூலம் சிறிலங்கா அரசு செய்ய நினைப்பது?
 

விளம்பரம் Google

பிரபாகரன் அந்தாதி

eelakaaviyam

பிரபாகரன் அந்தாதி

01 02 03 04 05 06 07 08 09 10

ஈழகாவியம்

eelakaaviyam

ஈழகாவியம் இலக்கியத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09 10 11 12 13 14 15 16

நக்கீரன் பக்கம்

இலங்கை வரலாற்றுத்தொடர்

01 02 03 04 05 06 07 08 09

பதிவுசெய்யும் பகுதி



தேடுதல் பொறி