திரைத்துறை: ஆண்களின் ஏகபோக உரிமையாக இருந்தது, இருக்கிறது .
கனிமொழி மற்றும் வைசாலி கண்ணதாசன் போன்றோர் முன்பே பாடல்கள் எழுதி இருந்தாலும் அவர்கள் திரையிசைப் பாடலாசிரியர்களாக தங்கள் துறையை மாற்றிக் கொள்ளவில்லை. இயந்திரவியல் படித்து இயந்திரங்களுடன் பழகத்தலைப்பட்ட ஆறுவருடங்களின் பின் கவிதைகளுக்கான தன் தாகத்தை உணர்ந்தவராய் பாடல் புனையத் தொடங்கியவர் கவிஞர் தாமரை.
பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருடைய ஆக்கங்கள் அறியப்படத் தொடங்கியபோது இயக்குனர் சீமானால் திரைத்துறையில் ’இனியவளே’ திரைப்படத்திற்காக தேவாவின் இசையில் ’தென்றல் எந்தன் நடையைக் கேட்டது’ பாடல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆண்கள் மட்டுமாய் (நடிப்பு தவிர்த்து) இருந்துவந்த துறைக்கு பெண் வருவதும் தன்னை நிலை நிறுத்தி கொள்வது என்பதும் எளிதானது அன்று.
கவுதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் எழுதிய பாடல்கள் இவருக்கு மிக நல்ல பெயரை ஈட்டித்தந்தன. சின்னத்திரையிலும் கணேஷ் வசந்த், பஞ்சவர்ணம் , பாக்யராஜின் “ ஒரு கதையின் கதை” போன்ற தொடர்களுக்காகப் பாடல்கள் எழுதிய அனுபவமும் இவருக்கு இருக்கிறது. முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட்ட ’மித்ரு மை ப்ரண்ட்’ படத்தில் இவர் பாடலாசிரியராக இருந்திருக்கிறார்.
பெண்களின் உணர்வுகளையும் ஆண்களின் வரிகளில் கேட்டே பழகிய நமக்கு , தாமரை எழுதிய ’வசீகரா’ பாடல் தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலாக பெண் ஒருத்தியின் காதல் உணர்வு பெண் பார்வையில் எழுதப்பட்ட பாடலாக பதிவாகி இருக்கிறது. பெண்ணின் தேவைகளை ஆசைகளை அவளே வெளிப்படுத்துவதில் வேறுபாட்டினைக் காட்டிய அந்தப் பாடல் அனைவரையும் வசீகரித்த ஒன்று. ஆங்கில வார்த்தைக் கலப்பற்ற பாடல்களைத் தரவேண்டுமென்கிற எண்ணமிருப்பவர். மட்டுமல்லாமல் மிக அழகான தமிழ்ச் சொற்களை இதுவரை பயன்படுத்தாத வகையில் திரைப்பாடல்களில் புகுத்துபவர் என்றும் சொல்லவேண்டும். இன்றைய கணினி உலகத்தில் இளைஞர்களும் வெற்றிப்பெற்ற பாடல்களில் வருகிற அந்தப் புதிய தமிழ்ச் சொற்களை என்னவென்று தேடித் தெளிந்து கொள்வது தமிழுக்கு நன்மையல்லவா? பாடலைப்பாடுபவரும் சரியான உச்சரிப்பைத் தருகிறாரா என்பதை இவர் கவனிக்கும் பழக்கமுடையவர். கூட்டாக அனைவரும் கவனம் எடுத்துக்கொண்டு வெளிவரும் பாடல் அழகாக அமைந்துவிடுவதில் ஆச்சரியமில்லை.
மேலும், இரட்டை அர்த்தக் கலப்புக்கள் மற்றும் ஆபாச வரிகள் இன்றி வெளிவரும் மிக மெல்லிய உணர்வுகளைக் காட்டும் வரிகளைக் கொண்ட தாமரையின் பாடல்கள் மக்களின் மனதை வருடி மகிழ்விக்கிறது . ஃபைவ் ஸ்டார் படத்தின் ஒரு பாடலில்
வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும்
வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும்
கட்டை விரலாய் நானும்
எழுதும் எதுவும்
கவிதையாக மாறும்
எளிமையாகவும் காதலைச் சொல்வதில் நளினமாகவும் வந்து விழுகிறது வார்த்தைகள்.
வேண்டாத வேலையென்று ஈழத்துப் பிரச்சனைகளை பலர் தவிர்த்துக் கொண்டிருக்க ,சிலரோ ஆறுதலாகப் பேசிவிட்டு அமைதிகொள்ள , தாமரை அதிகாரங்களையும் எதிர்த்துக் குரல் கொடுத்த வண்ணமிருக்கிறார். தன் கவிதைத் தொகுப்புகளிலும் மேடைப்பேச்சுக்களிலும் அவரின் எண்ணங்களை உரத்துச் சொல்கிறார். ஈழநேசன் இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.
கேள்விகள்..
இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?
ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.
முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?
இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.
தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்.
ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.
இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..
விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?
விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.
மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)
தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள்.. போருக்குப் பின்னும் மீள்குடியேற்றம் கனவாக, முகாம்களில் ஈழமக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை சீராவதற்கு ஏற்படும் தாமதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உலகம் முழுதும் இலங்கை அரசைக் கண்டனம் செய்து கொண்டிருக்கிறாங்க. இந்தியாவோ மற்ற நாடுகளோ சொல்லி இலங்கை கேட்பதில்லை. போருக்குப் பின் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பது எல்லா மத்திய, மாநில, உலக அரசுகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் முன்பே தெரிந்த விசயம் தான். அதை இன்று தான் தெரிந்துகொண்டது போல அரசுகள் நாடகம் ஆடுகின்றன. இந்தியாவே இலங்கை அரசைப் பாதுகாப்பது போல் இருப்பதனால் தான் உலகநாடுகள் தயங்குகின்றன .. போர்குற்றங்களுக்காக ஹிட்லரைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றது போல இன்று உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
நேற்று (11.10.09)காலை என் கணவரும் முன்னின்று நடத்திய தமிழினப் பாதுகாப்பு மாநாடு நாள் முழுதும் நடந்தது. காலை பேரணியில் மூவாயிரம் பேர் கலந்துகொண்டாங்க..மாலை பொதுக்கூட்டம் இருந்தது . கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்தோம். அதில் நானும் ஒரு தீர்மானம் வாசித்தேன். இலங்கையை நாம் வற்புறுத்த வேண்டுமெனில் பொருளியல் தடை விதிக்கலாம். தனிமைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புக்கு இலங்கை போகாமல் இருக்கவேண்டும்.







பேச்செறியும் பேருண்மை வாய்ததை வாய்பெனவே வணங்குகின்றேன்.
இவர்களை விட வீர்யமான கவிதாயினிகளை சமகால தமிழ் கொண்டிருக்கிறது. அவர்களை பெயரை குறிப்பிட்டு அவர்களை பெருமைப் படுத்தியிருக்கலாம்.
தாமரை தன்முனைப்பு கொண்டவர்தான் என்றாலும் அவர் செல்ல வேண்டிய தூரமும், அகலங்களும் நிறையவே இருக்கிறது என நினைக்கிறேன்.
வருங்காலத்தில் அவர் மேலும் மிளிர்ந்து பொலிய வாழ்த்துகள்....
என்றொரு கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். இந்தியா சொன்னதைத்தான் இலங்கை செய்து கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இந்தியா மகிந்தவிற்கு மாலையும், பணமும் என்று வாரியிறைத்துக்கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர் பால் அதீத அக்கறையுள்ள தோழர் தியாகுவிற்கும்,தங்களுக்கும் எனது தோழமையுள்ள வணக்கங்கள்.
ரமோனா
தாமரை என்னும் கவிஞர் முதலைகள்
சிந்துகின்ற கண்ணீரை ஏற்கமாட்டார்!உண்மைக்கே
என்றும் கொடிபிடிப்பார் சொல்.
மதுரை பாபாராஜ்
spbabaraj@gmail.com
maduraibabaraj.blogspot.com
m
தமிழால் இரத்தம் பாய்ச்சிய தாயே உன் வரிகள் காலத்தையும் கடந்து நிற்கும்.
தமிழைத் தமிழரை நேசிக்கும் தாமரை வாழ்க!
ஈழநேசன் இணையத் தளத்திற்குப் பாராட்டுக்கள்.
-ஈழவன்