ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று நாம் பெருமையுடன் கூறிக்கொள்ளும் இலக்கண நூல் தொல்காப்பியம். இந்த இலக்கண நூல், எழுத்து, சொல், பொருள், யாப்பு மற்றும் அணியிலக்கணங்களை விரிவாகப் பேசுகிறது. இந்த இலக்கண நூல் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனில் பல சங்க இலக்கியங்கள் அதற்கும் முற்பட்டவை. எழுத்தாலான இலக்கியங்கள் தோன்றுமுன் மனிதர்களின் பழக்க வழக்கங்களும், வாய்மொழி இலக்கியங்களும் தோன்றியிருக்கவேண்டும். குறிப்பாக சங்க இலக்கியங்கள் மனிதர்களின் வாழ்வு முறையைக் கூறுவனவாகவே அமைகின்றன. அதனடிப்படையில்தான் தொல்காப்பியம் பொருளிலக்கணம், யாப்பிலக்கணம் முதலியவற்றைப் பொருந்த அமைத்திருக்க முடியுமே தவிர, தொல்காப்பியத்தின் அடிப்படையில் பண்டைத் தமிழர்களின் வாழ்க்கை முறை அமைந்திருப்பது சாத்தியமே இல்லை.

தொல்காப்பியம், அகத்திணையில் மக்களின் வாழ்வை நில அடிப்படையில் பிரித்து விளக்குகிறது. ஒவ்வொரு நிலத்திற்குமான கருப்பொருள் கூறுகளைக் குறிப்பிடுகையில் ' தெய்வம் உணாவே மாமரம் புட்பறை' என்று முதலில் ஒவ்வொரு நிலத்திற்குமான தெய்வத்தை வரையறுத்துவிடுகிறது தொல்காப்பியம்.
'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'' என்ற தொல்காப்பியச்சூத்திரத்தில், திருமால் என்று அழைக்கப்படும் விஷ்ணு முல்லை நிலத்திற்கும், வேலோன், செவ்வேள் என்றெல்லாம் அழைக்கப் படும் முருகனைக் குறிஞ்சி நிலத்திற்கும் உரிய கடவுளரென்றும் மருத நிலத்தலைவனான இந்திரனையும், நெய்தல் நிலத் தலைவனாக வருணனையும் வானக் கூறப்படுகிறது. மேலும் பாலை நிலத் தெய்வமாகக் கொற்றவை (காளி) இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது/. இதிலிருந்து தொல்காப்பியத்திற்கு முந்திய காலத்திலேயே இத்தெய்வங்களுக்கான வழிபாடு தமிழ் நாட்டில் வேரூன்றியிருந்தமையை அறியலாம். ஆனால், தமிழினத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இரட்டை வேடம் போடும் இன்றைய தலைவர்கள் இவை எல்லாம் வட நாட்டுத் தெய்வங்கள் என்று உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால், சிந்து சமவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகத்தின் முன்னோடி என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். லெமூரியாக் கொள்கை உடையவர்கள், லெமூரியாக்கண்டத்தில் தோன்றிய திராவிடர்களே (தமிழர்களே) சிந்து வெளியில் குடியேறினர் என்றும் கூறுகின்றனர். அந்த சிந்து வெளி நாகரிகத்தில் பசுபதி ( அதாவது சிவபெருமான்) வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்கின்றனர். அதே ஆய்வாளர்கள், ஆரியர்கள் என்று கூறப்படுபவர்கள் தீயை வழிபட்டதாகக் கூறுகின்றனரே தவிர உருவ வழிபாடு மேற்கொண்டதாகத் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க தமிழர்கள் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகச் சித்தரிக்கப் படுவது கேலிக்கூத்து. 'பகுத்தறிவு இல்லாத ஆன்மிகம் மூடத்தனம்; ஆன்மிகம் இல்லாத பகுத்தறிவோ அரக்கத்தனம்'. அப்படியிருக்க நாகரிகத்தில் செழித்து அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கு பேறுகளும் சிறக்க வாழ்ந்த பண்டைத்தமிழர்கள் சமய நம்பிக்கை இல்லாதவர்களாகவா இருந்திருப்பார்கள்?
திருவள்ளுவருக்கு சிலைகள் வைத்து மகிழும் தமிழக முதல்வர் திருவள்ளுவர் 'கடவுள் வாழ்த்து' என்று பத்து எழுதியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார். (அது மட்டும்தானா என்ன.. அவர் எந்தத் திருக்குறளின் படி நடந்துகொண்டார்? 'தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற திருக்குறளைத் தவறாகப் புரிந்துகொண்டு தம் வாரிசுகளுக்குப் பதவி பெற்றுத் தந்ததைத் தவிர!)
கண்ணகி சிலை வைத்து அதற்கு மாலை போட்டு மகிழ்பவர்கள், சிலப்பதிகாரத்தில் புகார்க்காண்டத்தில் அப்பொழுதே சிவனுக்கும், முருகனுக்கும் திருமாலுக்கும் கோட்டங்கள் (கோயில்கள்) வைத்து வழிபட்டதையும், மதுரைக்காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையில் 'இராமாயண,மகாபாரத நிகழ்வுகள்' சுட்டப்படுவதையும் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?
பத்துப்பாட்டில் முதல் நூலே 'திருமுருகாற்றுப்படை'அல்லவா? 'முல்லைப்பாட்டு' போருக்குச் சென்ற தலைவன் வருகை வேண்டி தலைவி நெல்லும், மலரும் இறைத்து வழிபட்டதையும், குறிஞ்சிப்பாட்டு தலைவனை வருணிக்கையில் 'அவன் முருகன் போல் அழகன்' என்றும் கூறவில்லையா? புறநானூற்றில் சிவபெருமான் பற்றி 'ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்' என்ற வரி ஈசன் ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்துள்ளதைக் குறிக்கிறது. கலித்தொகையில் சிவன் முப்புரத்தை எரித்த புராண நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது.
'மடங்கல்போல் சினைஇ மாயம்செய் அவுணரைக்
கடந்து அடுமுன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல் ஒண்கதிர் தெறுதலின்'
என்ற வரிகள் திரிபுரத்தை எரிக்க வந்த சிவனின் முகம் கோபத்தால் சிவந்திருந்ததைப் போல், கதிரவன் சுடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாணாற்றுப்படை திருமால் ஆதிசேடனாகிய பாம்பணையில் பள்ளிகொண்டிருப்பவர் என்பதை
'நாடு பல கழிந்த பின்றை நீடுகுலைக்
காந்தள் அம்சிலம்பில் களிறு படிந்தாங்குப்
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கன்' என்று குறிப்பிடுகிறது.
இன்னும் பற்பல பத்துப்பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்களில் கடவுளை நெல்லும் மலரும் தூவி வழிபட்டது குறித்தும் பற்பல கடவுளர்கள் குறித்த செய்திகளும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று ஒரு சங்கப்புலவர் இருந்தமை, அக்காலத்தில் மகாபாரதம் தமிழ்நாட்டிலும் பரவி இருந்ததை விளக்குகிறது. இது தவிர, ஏனைய பதினென் கீழ்க்கணக்கு நூல்கள், மணிமேகலை,குண்டலகேசி, நீலகேசி போன்ற பல நூல்கள் சைவம், வைணவம் தவிர பௌத்தம், சமணம் ஆகிய அனைத்து மதங்களும் பண்டைத்தமிழகத்தில் வழங்கிவந்த செய்திகளை நமக்கு அறிவிக்கின்றன. இச்சான்றுகள் சங்க காலத்தில் ஆன்மிகமும் உயரிய இடத்தைப் பெற்றிருந்ததை நாம் நன்கு உணர முடிகிறது.







வாழ்க தமிழ்! வெல்க தமிழர்!
GOD is there , GOD is there, GOD is there.
The Article is Really Very Good. Keep Writng on Spiritual Matters
எனவே, “கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி நம் தமிழ்க்குடி” என்று மேடைதோறும் வாய்கிழியக் கூச்சலிடும் நவீன “தமிழினத் தலையர்”களது பகுத்தறிவு, தெய்வத்தைக்கூட ஆரியருக்கு முன்பே நம் தமிழ்க்குடி வழிபட ஆரம்பித்திருக்கலாம் என எண்ணாது விட்டது ஏனென்று தெரியவில்லை. புதிதாக எதனையாவது கூறி மக்களின் கவனத்தை திசைதிருப்பும் அரசியல் யுத்தியாக இது இருக்கலாம்.
இந்தக் கட்டுரையினைத் தொடர்ந்து இதுபற்றி விரிவாக ஆராய்ந்து எழுதுவது பயந்தரும்.
கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.