உயிரும் சதையுமாய் இருப்பவர்கள் திரைப்படத்தில் உணர்ச்சிகளைக் கொட்டி நடிப்பது என்பது ஒரு வகை. அதிலும் கூட ஒவ்வொருவர் தான் தனித்திறமையோடு மிளிர முடிகிறது. ஓவியங்களாய் வரைந்தவை உயிர்பெற்று நடமாடும் வரைபட அசைபடங்கள் (கார்டூன் அனிமேசன்) நாளுக்கு நாள் மனித கண்டுபிடிப்புக்களின் உச்சங்களைத் தொட்டு நிற்கின்றன. முப்பரிமாணத்தில் வரையப்படும் கதாபாத்திரங்கள் தன் அசைவுகளாலும் உணர்வு வெளிப்பாடுகளாலும் ஓவியங்கள் என்பதனையே நம்மை மறக்கச் செய்யக்கூடிய வல்லமை படைத்தவையாக இருக்கின்றன .
முப்பரிமாணப் கணினித் தொழில்நுட்ப வரைபட அசைபடங்கள் (3D Computer Animations) என்றால் முக்கியமானவர், ஜான் லாஸ்டர் (John Losseter). இவர் கார்டூன் என்றாலே நினைவுக்கு வரும் டிஸ்னி நிறுவனத்தில் "101 டால்மேசியன்ஸ்" போன்ற திரைப்படங்களுக்காக உழைத்தவர். தொடர்ந்து பழைய விசயங்களையே செய்து கொண்டிருக்கப் பிரியப்படாத ஜான் புதிய கணினித் தொழில்நுட்பங்களின் பால் தன் கவனத்தைத் திருப்பினார். அதனால் டிஸ்னி நிறுவனத்திலிருந்து தன் அசைபட வேலையை விட்டு வெளியேறவும் நேர்ந்தது. வேறு சில கூட்டணிகளோடு லூகாஸ் கணினிக்குழுவில் இணைந்து செயல்படத் தொடங்கி முதலில் முப்பரிமாண பின்புலங்களுக்காக (Computer Graphics backgrounds)மட்டும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த நினைத்தவர்கள் பின்பு கதாபாத்திரங்களையும் அதனைக்கொண்டே உருவாக்கினர்.
முதலில் சோதனை முயற்சியாக குறும்படமும் (André and Wally B.) அதன் பின் உலகில் முதன் முதலாக கணனித் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட வரைபட அசைபடம் என்ற பெருமையுடன் முழுநீளத்திரைப்படமாக "டாய் ஸ்டோரி" வெளிவந்தது இந்த வெற்றிக்குப் பின் ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவரின் தலைமையில் பிக்ஸார்(pixar) என்கிற அசைபட(animation) நிறுவனம் தோன்றியது. 2006 ஆம் ஆண்டு டிஸ்னியோடு இணைத்துக்கொள்ளும் வரையில் பிக்ஸார் நிறுவனம் முப்பரிமாண அசைபடங்களுக்காக பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டும் விருதுகளை வாங்கிக்குவித்தபடியும் பல போராட்டங்களுடன் முன்னேறி வந்திருக்கிறது. தொடர்ந்து பிக்ஸார் டிஸ்னியில் இணைந்த பின்பும் இத்தகைய அசைபட குறும்படங்களைத் தன் மேற்பார்வையில் தயாரித்து வருகிறார் ஜான் . இக் குறும்படங்கள் ஒருவகையில் புதிய வல்லுநர்களை அடையாளம் காணவும், புதிய புதிய உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கும் களமாகவும், புதிய தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கவும் பயன்படக்கூடியது என்கிறார் ஜான் லாஸ்டர்.
பிக்ஸார் கணினியில் வரையப்பட்ட அசைபடங்களைக் கொண்டு முழு நீளப்படங்கள் மற்றும் குறும்படங்கள் பலவற்றை எடுத்திருக்கிறார்கள் அவற்றில் பவுண்ட் இன்(boundin) என்கிற குறும்படம் தன்னம்பிக்கையை, ஊக்கத்தை, சூழ்நிலையைச் சாதகாமாக்கிக் கொள்ளும் வழியைச் சுட்டுகிறதாக இருக்கின்றது.
அழகான வெண்செம்மறி ஆடு ஒன்று. அது தன் பட்டுப்போன்ற பளப்பளப்பான கம்பளியுடலுக்காகவும் அழகான துள்ளல் ஆட்டத்திற்காகவும் நண்பர்களால் நேசிக்கப்பட்டு வருகிறது. கம்பளி நீக்கப்பட்டுவிட்ட ஒருநாள் "நான் அசிங்கமாக , ரோஜா வண்ணத்தில் கேலிக்குறியவனாக நண்பர்களுக்குத் தோன்றிவிட்டேனே" என்றுசோர்ந்து போய்விடுகிறது. அங்கே ஜேக்கலோப் (ஜாக் ரேபிட் (முயல்) உடல் + மானின் கொம்புகளுடையது) என்கிற கற்பனைக் கதாபாத்திரம் வருகிறது.
"உன் வண்ணத்தில் என்ன இருக்கிறது? சொல்லப்போனால் இப்பொழுது தானே நீ உன் நடனத்தை மேலும் சிறப்பாக்கிக் கொள்ளமுடியும். உயர உயர மிக உயரமான துள்ளல்கள் ஏன் நீ செய்யக்கூடாது? நடனம் சிறப்பாக இருக்கும் போது அதே நண்பர்கள் மீண்டும் ரசிக்கத்தானே செய்வார்கள்" என்று காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மீண்டும் மே மாதம் வருகிறது. மீண்டும் கம்பளி நீக்கப்படுகிறது. ஆனால் இம்முறை ஆட்டுக்குட்டிக்குச் சோகமில்லை, வருத்தமில்லை . தன்னம்பிக்கையோடு முன்போலவே குதித்தாடுகிறது.
கொக்கின் அலகில் ஒரு குழந்தை கிடக்கும் மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும் படத்தை நீங்கள் வாழ்த்து அட்டைகளில் பார்த்திருப்பீர்கள். சில நாடுகளில் வெள்ளை நிறக் கொக்கு ((white stork) பிள்ளைப்பேற்றுக்கான அதிர்ஷ்டத்தை வழங்குவதாக கதைகள் வழியாக நம்பிக்கை நிலவுகிறது. நீண்ட தொலைவு வலசை (migration) போவதன் பொருட்டு வசந்தகாலத்தில் வந்து சேர்கின்றன. அவை குடும்பத்துக்கு வசந்தகாலத்தின் தூதுவர்களாக நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக உக்ரேனிய நாட்டில் கருதுகிறார்கள். இதனால் அவை மனிதர்கள் வசிக்கின்ற பகுதிகளுக்கு அருகில் கூடுகட்டி வாழத் தடை ஏதும் இருப்பதுமில்லை.
பார்ட்லி க்ளவுடி(partly cloudy) .
Short film: Pixar's - Partly Cloudy மேகங்களிலிருந்து தான் அந்தக் கொக்குகள் குழந்தைகளைக் கொண்டுவருவதாக இக்கதை பின்னப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு மேகத்திற்கும் ஒரு கொக்கு உண்டென்றும் அவை மேகங்கள் படைக்கின்ற அழகான , ரசிக்கத்தகுந்த குழந்தைகளையும் பூனைகுட்டிகளையும், நாய்க்குட்டிகளையும் அதனதன் தாயிடம் கொண்டு சேர்ப்பதுமாக இருக்கின்றன. ஆனால் கெஸ் என்கிற மேகம் செய்வதெல்லாமோ ஒரு முள்ளம்பன்றி, ஒரு முதலை போன்ற அச்சமூட்டுகின்ற விலங்கினங்களின் குட்டிகளைத் தான். அவைகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் அந்த மேகத்தின் நட்புக் கொக்குக்குத்தான் எல்லாத் துன்பமும் நேரிடுகிறது. ஆனாலும் அது அச்செயலை ஒரு கர்மயோகியைப்போல செய்துவருகிறது. சிரித்தபடியே மேகத்திடம் தன் துன்பத்தை மறைத்துப் பழகுகிறது. உள்ளூர மற்ற கொக்குகளைப்போல எளிய வேலை தனக்கு அமையவில்லை என்கிற எண்ணம் கொண்டு இருந்தாலும் துன்பத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள நண்பனை விட்டு அது விலகவில்லை .
கொக்கின் சிரிப்பும் மேகத்தின் நொடிக்கொன்றான முகபாவங்களும் ரசிக்கத் திகட்டாத ஒன்று. அடி , இடி படாமல் இருக்க கவசங்கள் அணிந்து வரும் கொக்குக்கு மின்சாரம் வெளிப்படுத்தும் மீனைப் படைத்துத் தருகிறது மேகம். தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே..
கதையில் மட்டுமல்ல நிஜத்திலும் தொடர்கிறது வாழ்க்கை அதன் போக்கிலே ... யார் சொன்னது வரைபட அசைபடங்கள் குழந்தைகளுக்கானது என்று ? அது பெரிய குழந்தைகளுக்குமானது தான். பெரியவர்களுக்குள்ளும் குழந்தைகள் உண்டு தானே. போட்டி நிறைந்த உலகத்தில் தோல்விகளைச் சந்திக்காத வயதினரே இருக்கமுடியாது. வெற்றிகளை விடவும் தோல்விகள் வாழ்வினை முழுமையாகப் புரிந்துகொள்ள வாய்ப்பு அமைத்துக் கொடுப்பதுண்டு. குழந்தைகளுக்குத் தோல்வி என்பதும் ஓர் அனுபவமே என்று கற்றுக்கொடுக்க நினைக்கிறோம். மாற்ற இயலாத் தருணங்களின் நேர்மறை பக்கத்தைக் காணவும், அச்சூழலில் மனத்திண்மை கொண்டு எழுந்து நிற்கவும் பழக்க நினைக்கிறோம். இவ்வாறான படங்கள் அவ்வேலையை எளிதாக்குகிறது. கற்றுக்கொடுக்கும் நேரத்தில் நாமும் கற்றுக்கொள்வோம். - கயல் லக்ஷ்மி






