கிறிஸ்தவர்களின் புனிதத்தலமான மடுமாதா தேவாலயத் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. சுமார் ஐந்நூறு வருடங்கள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சின்னம் மடுமாதா ஆலயம். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இத்திருத்தலத்தின் திருவிழாவை இம்முறையும் வெகு கோலாகலாமாக கொண்டாடவேண்டும் என்று சிறிலங்கா அரசு வழங்கிய ஆலோசனைகளின்படி திருவிழா ஏற்பாடுகளை மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு யோசப் அவர்கள் மேற்கொண்டுள்ளார். இம்முறை திருவிழாவில் பங்குகொள்ளுவதற்குப் பெருந்தொகையான சிங்களமக்கள் தென்னிலங்கையிலிருந்து அங்கே செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மடுமாதா தேவாலயம் அமைந்துள்ள இடமும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களும் கடந்த வருடமுற்பகுதியில் எவ்வாறான ஒரு நிலையில் காணப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம். மன்னார்ப் பகுதியால் தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்புப் போரைத் தொடங்கிய சிறிலங்கா இராணுவம், மடுமாதா தேவாலயம் அமைந்துள்ள பகுதியினுள் எறிகணைகள் வந்து வீழ்வதாகவும் தேவாலயத்தின் பாதுகாப்பு பயங்கரமான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பலதரப்பிலும் தெரிவிக்கப்பட்டபோதும் அகோரமான எறிகணைத்தாக்குதல்களை நடத்தியது. தாக்குதலை நிறுத்தக்கோரி ஊர்வலங்கள்கூட நடத்தப்பட்டன. பன்னாட்டுக் கிறீஸ்தவ அமைப்புக்களும் வேண்டுகோள் விடுத்தன.

ஆனால், தேவாலயம் அமைந்த பகுதியைப் பாதுகாப்பு வலயமாக அறிவித்து, தாம் கண்ணியமான போர் நடத்துவதாகக் காண்பித்துவிட்டு, அப்பகுதி மீது சரமாரியான தாக்குதலை நடத்திய இராணுவத்தின் நடவடிக்கையால் மடுமாதா தேவாலயமும் பலத்த சேதத்துக்குள்ளானது. தேவாலயத்துக்குள் வீழந்துவெடித்த எறிகணையால் மடுமாதா சொரூபமும் சேதத்துக்குள்ளானது. மடுமாதா தேவாலயத்தின் மீது தாக்குதல் நடைபெறாது என்று நம்பி அதனை அண்டிய பகுதிகளில் தஞ்சம்புகுந்திருந்த சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். மக்களுடன் சேர்ந்து மடுமாதா திருச்சொரூபமும் இடம்பெயர்ந்தது. மடுமாதா திருச்சொரூபம் தேவன்பட்டியிலுள்ள தேவாலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டது
அந்தக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட ஆயராகவிருந்த வணக்கத்துக்குரிய தியோப்பிள்ளை அவர்கள் தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தினை முன்கூட்டியே அறிந்து, பன்னாட்டு ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் தலைமையகத்திடம் சென்று பேசி, தமிழர் தாயகத்திலுள்ள மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றை தனித்தனிக் கத்தோலிக்க மறைமாவட்டங்களாக உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்திக்கொண்டனர்.
அவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற மக்களில் பலர் போனவழியில் எறிகணைத்தாக்குதலுக்கு இலக்காகியும் ஆழ ஊடுருவித்தாக்கிய இராணுவ அணிகளது தாக்குதலில் அகப்பட்டும் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கண்ணீரும் இரத்தமும் சதையுமாக ஓரினத்தின் பேரவலத்தைக் கண்ட மண்தான் மன்னாரும் மடுமாதா தேவாலயம் அமைந்துள்ள பிரதேசமும் ஆகும். ஆனால், இன்று அவை அனைத்தையும் மறைத்து - போர் ஏனைய இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் - தமது தாக்குதல்களினால் சேதமடைந்த தேவாலயத்தை அடையாளம் தெரியாது புனரமைத்த அரச தரப்பு, புதுப்பொலிவுடன் அதனைக் காண்பித்து, தாம் ஒன்றுமே செய்யாதது போலவும், அப்பகுதியில் இடம்பெற்ற சிற்சில சம்பவங்களும் விடுதலைப்புலிகளாலேயே ஏற்பட்டது என்றும் கூறி மடுமாதா தேவாலயத் திருவிழாவைக் கோலகலமாக நடத்துகிறது.
அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் உட்பட சுமார் மூன்று இலட்சம்பேர் வவுனியாவிலும் ஏனைய பகுதிகளிலும் முகாம்களில் கொட்டகைகளுக்குள் எந்தவித வாழ்வாதாரங்களுமின்றி மரணத்தின் விளிம்பிலிருந்து மன்றாடிக்கொண்டிருக்க, மடுமாதா தேவாலயத்துக்கு வண்ணப்பூச்சு பூசி சிங்களம் - ஆங்கிலம் - தமிழ் கலந்த பெயர்ப்பலகைகள் மாட்டி, அதனை சிங்கள மக்களுக்குச் சுற்றுலாத்தலமாக திறந்துவிட்டிருக்கிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் அரசுகள் மடுமாதா தேவாலயத்தை என்றைக்கும் தமது அரசியல் பொருளாகவே பார்த்து வந்துள்ளன. அத்துடன் மடுமாதா தேவாலயம் தமிழர் தாயகத்தில் இருப்பது அவர்களுக்கு ஏக சீற்றத்தையும் எற்படுத்திவந்த விடயமாகும். மடுமாதா தேவாலயம் அமைந்துள்ள பகுதியைச் சிங்களப் பகுதிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காகவே அப்பகுதியைச் சிங்கள மாவட்டத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளை எண்பதுகளின் முற்பகுதியிலேயே சிங்கள அரசுகள் மேற்கொண்டிருந்தன.
அந்தக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட ஆயராகவிருந்த வணக்கத்துக்குரிய தியோப்பிள்ளை அவர்கள் தலைமையிலான குழுவினர் அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தினை முன்கூட்டியே அறிந்து, பன்னாட்டு ஆயர்கள் மற்றும் கத்தோலிக்க மதகுருமார் தலைமையகத்திடம் சென்று பேசி, தமிழர் தாயகத்திலுள்ள மன்னார், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகியவற்றை தனித்தனிக் கத்தோலிக்க மறைமாவட்டங்களாக உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அதனை வெற்றிகரமாகச் செயற்படுத்திக்கொண்டனர். எல்லாம் நடந்துமுடிந்த பின்னர் விடயத்தைத் தெரிந்துகொண்ட சிங்கள அரசு, தனது திட்டத்தில் மண்விழுந்ததை உணர்ந்து சீற்றமடைந்தது. ஒருதடவை வணக்கத்துக்குரிய தியோப்பிள்ளை அவர்களைச் சந்தித்த அப்போதைய சனாதிபதி பிரேமதாச, "இது அரசியல் விவகாரம். இதனை மத விவகாரமாக்கி நினைத்ததைச் சாதித்துவிட்டீர்கள்" - என்று சீறிவிழுந்தார்.

இதன்பின்னர், பல ஆண்டுகள் கழித்து தொண்ணூறுகளில் வன்னியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வணக்கத்துக்குரிய தியோப்பிள்ளைக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் கெளரவமளித்த நிகழ்வொன்றில் பேசிய மூத்த உறுப்பினர் யோகி, "மறைமாவட்டங்களை உருவாக்கியதன் மூலம் தமிழர்தாயகத்தின் எல்லைகளை வெளிஉலகுக்குத் தெரியப்படுத்தியவர் வணக்கத்துக்குரிய தியோப்பிள்ளை அவர்கள்" - எனக்கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.
இவ்வாறு சிங்கள தேசத்தின் அரசியல் நிகழ்ச்சிநிரலின் ஓர் அங்கமாக காலகாலமாக இருந்துவந்துள்ள மடுமாதா தேவாலய விடயம் இன்று மீண்டும் மகிந்தவின் காலத்தில் உருவெடுத்துள்ளது. தமிழர்தாயகத்தில் 16 ஆவது நூற்றாண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட இந்த வரலாற்று முக்கியத்தவம் வாயந்த புனிதத் தலத்தின் இருப்பைப் பேணுவது - மத எல்லைகளுக்கு அப்பால் - தமிழினத்தின் கடமையாகும்.







Madu Matha Thevalayam, Enthavithamana Aluththmumillamal, Kaththolikka Aayarkalin Viruppapadiyum, Suyamaka Iyanga VeNdum.
Nayagam