இன்று அமெரிக்காவின் பங்குச்சந்தையை, தவறு - அமெரிக்காவையே உலுக்கிக்கொண்டிருப்பது கல்லியான் ஹெட்ஜ் ஃபண்ட் (Galleon Hedge Funds) நிறுவனர் திரு ராஜ் ராஜரத்தினம் என்பவரும் மேலும் ஐந்து நபர்களும் செய்ததாகக் கூறப்படும் ஏறத்தாழ 20 மில்லியன் டாலர் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பங்குச்சந்தை தொடர்பான மோசடி. இவர்கள் மீது பிற நிறுவனங்களின் அந்தரங்கமான தகவல்களைத் திரட்டி, அந்தச் செய்திகளைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை Insider Trading என்பர். இதனைத் தமிழில் 'உள்ளிருப்போர் வர்த்தகம்' எனக் கூறலாம்.
உள்ளிருப்போர் வர்த்தகம் அதாவது Insider Trading என்றால் என்ன? அதைக்குறித்து, இந்தப் பங்குச்சந்தைப் பகுதியில் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
பங்குச்சந்தைகளில் ஏற்படும் ஊசலாட்டத்திற்கும், பங்குகளின் விலை ஏறி இறங்குவதற்கும் நிறுவனங்கள் குறித்த தகவல்களும் காரணம் என்று முன்பே பார்த்தோம். நல்ல விதமான தகவல்கள் விலை உயர்விற்கும், எதிர்மறையான தகவல்கள் விலைச்சரிவிற்கும் காரணமாகிவிடும் என்பதையும் தெரிந்துகொண்டோம். ஆனால், பிறருக்கு, அதாவது பொதுமக்களுக்கு இத்தகவல்கள் தெரிவதற்கு முன்பாக யாருக்கெல்லாம் தெரிய வாய்ப்புண்டோ அவர்கள் அத்தகவல்களைப் பயன்படுத்தி சந்தையில் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்பது பொதுவான விதி. உதாரணமாக X என ஒரு நிறுவனம் இருப்பதாகக்கொள்வோம். அந்நிறுவனம் Y என்ற மற்றொரு நிறுவனத்துடன் ஒரு பெரிய ஒப்பந்தத்தில் ஈடுபடுகிறது எனில், அந்தச் செய்தி வெளியில் தெரிந்த உடனேயே, X நிறுவனத்தின் பங்குகளின் விலை மளமளவென்று உயரத்தொடங்கும். ஆனால், இந்த ஒப்பந்தம் வரப்போகிறது என்பதை அதன் நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இச்செய்தி தெரியுமுன்பே அறிந்திருப்பார்கள் அல்லவா? இச்செய்தி வெளியில் பரவுமுன்பே அவர்கள் குறைந்த விலையில் அப்பங்குகளை வாங்கி இலாபம் பார்ப்பது, அல்லது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் அல்லது நபருக்கு இந்த இரகசியத்தகவலைக் கசியவிட்டு அவர்கள் இலாபம் பெற உதவுவது, அல்லது, பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் ஒன்று X நிறுவனத்தில் உள்ள, இத்தகவல்களுக்கு அணுக்கமான (Persons with Potential Access) நபர்களிடம் இருந்து (கையூட்டு முதலியவற்றைக்கொடுப்பதன்மூலம்) இத்தகைய அந்தரங்கமான, இரகசியமான தகவல்களைத்திரட்டி தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்துவது இவை எல்லாமே Insider Trading தான்.
இப்பொழுது Galleon Hedge Funds என்ற இந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் திரு ராஜ் ராஜரத்தினம் மற்றும் இவருடைய கூட்டாளிகள் (இதில் ராஜிவ் கோயல் மற்றும் அனில் குமார் என்ற இரு இந்தியர்களும் அடக்கம்) , IBM, Google உட்பட்ட ஏறத்தாழ ஏழு நிறுவனங்களில் இருந்து, முக்கியமான இரகசியத்தகவல்களைத் திரட்டி அத்தகவல்களைத் தமக்கு / தமது நிறுவனத்திற்கு முறைகேடாக லாபம் பெறப்பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2006 முதல் 2008 வரையான காலகட்டத்தில் இவர்கள், மற்ற பல பெரிய நிறுவனங்களில் இருந்து, அந்த நிறுவனங்களின் ஆதாய விவரங்கள், அவர்கள் மேற்கொள்ளவிருந்த கூட்டு வர்த்தகங்கள் (Business Tie-Ups) முதலியன குறித்த பல தகவல்களைப் பரிமாறிக்கொண்டு அதன் மூலம் பல மில்லியன் டாலர் தொகை லாபம் அடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
உள்ளிருப்போர் வர்த்தகம், அதாவது, முக்கிய அதிகாரிகள், பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்குவர்த்தகம் செய்வதைக்குறித்து சட்டங்கள் பல, பெரும்பாலான நாடுகளில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் Employee Stock Option மூலம் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது தவறாகக் கருதப்படமாட்டாது. ஆனால், ஒரு நிறுவனத்தின் வருடாந்திர, அல்லது காலாண்டுக் கணக்குகள் முடிவடைந்தபின், அத்தகவல்கள் வெளியில் பரவுவதற்குமுன் ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், குறிப்பாக அத்தகவல்களைக் கையாளக்கூடியவர்கள் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது சட்டப்படி குற்றமாகக்கருதப்படுகிறது. அதே போல், அத்தகவல்களைக் கையாள்பவர்கள், பிற வெளியாட்களுக்கு அத்தகவல்களைக் கசிய விடுவதும் பெரிய குற்றமே ஆகும்.
அமெரிக்க நாட்டின் பங்குச்சந்தை குறித்த சட்டமாகிய Securities and Exchange Act of 1934 (USA) பிரிவு 16 இன் படி, உள்ளிருப்போர் என வரையறுக்கப்பட்ட பணியாளர்கள், இயக்குனர்கள் மற்றும் 10% சதவீதத்துக்கு அதிகமாகப் பங்குகளை வைத்திருப்பவர்கள், அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கி ஆறு மாதத்திற்குள் விற்றுவிடுவார்களேயானால் அந்தப் பரிவர்த்தனையால் வரும் ஆதாயம் முழுவதையும், நிறுவனத்திற்குக் கொடுத்துவிடவேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில், ஒரு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ள எவரும், அந்நிறுவனத்தின் பங்குகளில் வர்த்தகம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் Securities Exchange Board of India வும், உள்ளிருப்போர் வர்த்தகத்தைத் தடுக்க பல வித வரையறைகளையும் விதிகளையும் நிர்ணயித்துள்ளது.
ஆனால், ஹென்றி மான் (Henry Manne) ,மில்டன் ஃப்ரீட்மன் (Milton Friedman) முதலிய பல பொருளாதார நிபுணர்கள், இந்த உள்ளிருப்போர் வர்த்தகம் சட்டவிரோதமானது என்ற நிலையை மாற்றி அதனை சட்ட பூர்வமாக்கவேண்டும் என்று வாதிடுகின்றனர். உள்ளிருப்போர் வர்த்தகம் சந்தையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பயனுள்ளதே என்று அவர்கள் கருதுகின்றனர். ஏனெனில், உள்ளிருப்பவர்கள் தமது நிறுவனத்தின் பங்குகளை பரிவர்த்தனை செய்கையில், விலை ஏற்றம் (அல்லது இறக்கம்) ஏற்படுமானால் அது சந்தையில் பிரதிபலிக்கத்தான் செய்யும் எனவும் அது அனைத்து முதலீட்டாளர்களுக்குமே நல்லதுதான் என்பதும் இவர்கள் கருத்து. மற்ற சந்தைகளில், குறிப்பாக நிலம் தொடர்பான வர்த்தகங்களில், உள்ளிருப்போர் வர்த்தகம் தவறாகக் கருதப்படாதபொழுது, பங்குவிற்பனையில் மட்டும் இந்தத் தடை எதற்கு என்பது இவர்கள் வாதம்.
ஆயினும் பங்குச்சந்தையைக் கண்காணிக்கும் நிறுவனங்கள், (e.g. Securities and Exchange Commission (USA), Securities Exchange Board of India ) முதலியவை உள்ளிருப்போர் வர்த்தகத்தை "மோசடி" என்றே கருதுகின்றன. இங்கிலாந்து, ஜப்பான் முதலிய நாடுகளிலும் உள்ளிருப்போர் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால், 1988ம் வருடம் ஜப்பான் நாடுதான் முதலில் உள்ளிருப்போர் வர்த்தகத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றியது. 1998ம் ஆண்டில் 'International Organisation of Securities Commission' (IOSCO) என்ற சர்வதேச நிறுவனம் இயற்றிய, சந்தை தொடர்பான அடிப்படைக்கொள்கைகளில் முதலாவதாக, முதலீட்டாளர் பாதுகாப்பு விளங்குகிறது. உள்ளிருப்போர் வர்த்தகம் முதலீட்டாளர்களை ஏமாற்றவல்லதாகவும், ஒரு சாரார் மட்டும் நியாயமற்ற முறையில் பலன் பெறுவதாகவும் இருப்பதால் உள்ளிருப்போர் வர்த்தகம் தவறானது எனவும், வணிக நெறிமுறைகளுக்கு (Business Ethics) எதிரானதாகவும் கருதப்படுகிறது.






