மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாதது என்பது பொன்மொழி. நேற்றுபோல் இன்று இல்லை, இன்று போல் நாளையில்லை. ஒவ்வொரு நாளும் உலகம் ஒரு புதிய மாற்றத்தைக் கண்டு வருகிறது. ஆதிமனிதன் முதலில் இலைகளை உடுத்தத்தொடங்கியது முதல், இன்றைய கணிணி யுகம் வரை, வாழ்க்கை முறைகளில், வியாபாரங்களில், தகவல் பரிமாற்றங்களில், சுற்றுப்புறச் சூழலில் எத்தனை எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றங்களுக்கு ஏற்ப, தம்மைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும் நிலைத்திருக்க முடிவதில்லை.
இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறாத உயிரினமான டைனோசர், எத்தனையோ பெரியதாக இருந்தும், சுத்தமாக அழிந்து விட்ட உயிரினமாகி விட்டது. சூழலுக்கேற்ப தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் கரப்பான்பூச்சிகளை எத்தனை பூச்சிக்கொல்லிகள் வந்தும் அழிக்க இயலவில்லை.நிறுவனங்களும், மனிதர்களும்கூட அப்படித்தான். நான் கணிணியைக் கற்கமாட்டேன், கையால்தான் எழுதுவேன் அல்லது தட்டச்சுதான் செய்வேன் என்று ஒருவர் இருப்பாரானால் அவருக்கு வேலையே கிடைக்காது. இன்றைய உலகத்திற்கேற்ப வியாபார நுணுக்கங்கள், நடைமுறைகள், தொழில் நுட்பங்களை மேம்படுத்தாத நிறுவனமும் வெற்றி பெறாது. நிறுவனங்களின் மாற்றங்கள் அங்கு உள்ள மனிதர்களால் நடைபெறுகின்றன. மனிதர்கள் மாறுவது, அவர்கள் மனப்பான்மையினால் மட்டுமே நடைபெறுகிறது.
பிறர் மாறவேண்டும் என்று எதிர்பார்க்குமுன், நாம் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மைத் தயார்செய்துகொள்ள வேண்டும். நாம் முன்னோடியாக இருக்க வேண்டும். அதுவே சிறந்த தலைமைப் பண்பு.
மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி?
மாற்றங்களை எதிர்கொள்வது எளிதானதன்று. அது கடுமையானது, மாற்றம் என்பது வலி தரக்கூடியது. ஒரு இரும்புத்துண்டு மின்னும் வாளாக மாற அது சம்மட்டி அடிகளைத்தாங்க வேண்டும்; ஒரு கல் சிற்பமாக மாற உளியால் சிதைக்கப் பட வேண்டும்; பொன் அழகிய நகையாக உருவெடுக்க தீயில் உருகவேண்டும்.அந்த வலியைப் பொறுத்துக்கொண்டால்தான் வாழ்வு சிறக்கும். மாற்றம் வேண்டாம் என்று ஒதுங்கினால் நாம் தேங்கிய குட்டையாகி விடுவோம். அதிலும் நாம் பணி புரியும் இடத்தில், நமது தொழிலில் நாம் வேண்டாமென்றாலும் மாற்றம் வந்துதான் தீருமெனில், அதை நாமே மனமார வரவேற்போமானால் நமக்கு குறைந்தபட்சம் மன அமைதியாவது மிஞ்சுமில்லையா?
மாற்றங்களுக்குத் தயாராக இருங்கள்: மாற்றம் நல்லதா கெடுதலா என்ற ஆராய்ச்சியில் புகவேண்டாம். எதிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. தீயை உணவு சமைக்கவும் பயன்படுத்தலாம், ஒருவர் வீட்டைக்கொளுத்தவும் உபயோகிக்கலாம். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதானே முக்கியம்? நடப்பதெல்லாம் நல்லதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதும், மாற்றத்தை வெறுக்காமல் வரவேற்பதும், மாற்றங்கள் சுமுகமாக நிகழ நாமே வழியமைத்துக்கொடுப்பதும் நமது அலுவலகத்திலும் தொழில் வட்டாரங்களிலும் நமக்கு மரியாதை கிடைக்க உதவியாக இருக்கும்."மாற்றம் என்பதை ஒரு வண்டி என்று கொண்டால், நாம் அதன் பாகமாக இருக்கவேண்டும், அல்லது அதை ஓட்டுபவராக இருக்கவேண்டும். இல்லையெனில் நாம் அதன் கீழ் நசுங்கிவிடுவோம்." என்கிறார் ஒரு அறிஞர்.
கற்றுக்கொள்ளுங்கள்: புதிய மாற்றங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம்? சென்னையில் இருக்கும் ஒருவரை பதவி உயர்வு கொடுத்து பஞ்சாபிற்கு மாற்றினால் கூட அவர் ஏன் தயங்குகிறார்? புதிய மொழி, புதிய மக்கள், புதிய சூழல் இவை நமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதுவே அவர் பொழுதுபோக்காக இந்தி அல்லது பஞ்சாபி மொழியைக் கற்றிருந்தால்? ஆவலுடன் பதவி உயர்வை ஏற்றுக்கொள்ள மாட்டாரா? எனவே புதிய நிகழ்வுகள், தொழில் நுட்பங்களைக் குறித்த அறிவைப் பெருக்குங்கள். தனியாகப் பள்ளிக்கும் கல்விக்கும் சென்றுதான் பாடம் படிக்க வேண்டும் என்று இல்லை. புத்தகங்கள், கணிணி, இணையம் இவற்றைப் பயன்படுத்தி ஏராளமாக, தாராளமாக நமது அறிவைப் பெருக்கலாம். அறிவு விசாலமாகையில், மனமும் விரிவடைகிறது. புதியதை வரவேற்கும் பக்குவம் பெறுகிறது.
அலைகள் ஓய்வதில்லை: மாற்றங்களும்தான். அலைகள் வருவதைக் கணித்து எதிர்கொள்ள எப்பொழுதும் தயார் நிலையில் இருங்கள். உங்கள் உடன் இருப்பவர்களையும் தயார்படுத்துங்கள். இதனால் மாற்றங்களை நீங்களே தலைமை தாங்கி நிகழ்த்தலாம். எதிர்காலத்தைக் கணிக்கும் உங்கள் திறனும் உங்கள் நிர்வாகத்தினரால் கவனிக்கப்படும்.
நீங்கள் குறை தீர்ப்பவராக இருங்கள்: பிரபல இந்தியத் தொழிலதிபர் டாடா அவர்களின் அறை வாயிலில் 'இங்கு குறைகளை முறையிட வருபவர்கள் யாராயிருந்தாலும் அதைத் தீர்க்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனையுடன் வரவும்.' என்று எழுதியிருக்குமாம். ஆம். யார் வேண்டுமானாலும் செய்த செயலில் ஆயிரம் குறைகாணலாம். ஆனால் தீர்ப்பது கடினம். மாற்றங்களினால் ஏற்படும் பிரச்னைகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். அதற்கான மாற்று யோசனைகளைச் செய்வதில் நீங்கள் முன்னால் நில்லுங்கள்.
நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்துங்கள்: மலை போன்ற சங்கடங்களும், நகைச்சுவை என்ற துணை இருந்தால் பனியாக மாறிவிடும். பிறருடன் பழகுகையில், உங்கள் கவலைகளை, அச்சங்களை வெளிப்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம். நகைச்சுவை உணர்வு எவரையும் இலகுவான மனநிலைக்குக் கொண்டுவருகிறது. நேர்மறைச் சிந்தனையை ஊக்குவிக்கிறது. நேர்மறைச் சிந்தனை, மாற்றங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்கிறது.
பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளத்தயங்காதீர்கள்: புதிய சூழல், புதிய தொழில் நுட்பம், புதிய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் இவற்றின் பொழுது பலரும் பொறுப்பேற்கத் தயங்குவது சகஜம். நீங்கள் அதில் ஒருவராக வேண்டாம். "நான் செய்கிறேன்" என்று முன் வந்து தன்னம்பிக்கையுடன் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். எந்தப் பெரிய பயணமும் ஒரு புதிய அடி எடுத்துவைக்கையில்தான் துவங்குகிறது.
மாற்றமே வெற்றிக்கு வழி. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்காமல் திரும்பியிருந்தால் யாரும் குறை சொல்லியிருக்கப் போவதில்லை, அதே நேரம் இன்று வரை அவரை யாரும் நினைவு வைத்திருக்கவும் போவதில்லை. பிறர் ஏற்படுத்தி வைத்த வழியில் போவது பெரிதல்ல. நாம் புதிய வழியை உருவாக்கி நம் பின்னால் பலரை வரவைப்பதுதான் அரிது.







உங்கள் பதிவில் குறள் மேற்கோள் காட்டி இருகிறீர்கள். அதன் பொருளையும் போட்டால் புரிய வசதியாக இருக்கும் .